பொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார் சிறீதரன் எம்.பி!

“தமிழ் மக்களுக்கு நீதியான – நிரந்த அரசியல் தீர்வு கிடைக்கும் வரை த.தே.கூ அரசுடன் பங்காளி ஆகாது. வேண்டுமானால் அவர்கள் பொதுத்தேர்தலை நடாத்தி மக்களின் முடிவை பெறட்டும்.”

இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன்.

தனித்து ஆட்சியமைப்பதற்காக ஐ.தே.க தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஆதரவை நாடியுள்ளது என்றும், கூட்டமைப்பு அதற்கு இணங்க முன்வந்துள்ளது எனவும் செய்திகள் வெளியாகியுள்ள நிலையிலே சிறீதரன் எம்.பி இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு.

தேசியக்கட்சிகளுக்கு ஆதரவளிக்க வேண்டிய எந்தவொரு தேவையும் கூட்டமைப்புக்கு கிடையாது. கூட்டமைப்பின் கொள்கை வேறு பேரினவாதக் கட்சிகளின் கொள்கை வேறு.

எமது மக்களுக்கு நிரந்தரமான – நீதியான ஓர் அரசியல் தீர்வு கிட்டாதவரை நாங்கள் ஆட்சியில் அமரும் எந்தவொரு அரசுடனும் பங்காளிகள் ஆகப்போவதில்லை. அதில் த.தே.கூ 100 வீதம் தெளிவாக உள்ளது.

ஏனெனில் ஆட்சியில் அமரும் கட்சிகளில் எதுவாக இருந்தாலும் அவர்கள் காலம் காலமாகத் தமிழ் மக்களை ஏமாற்றியே அரசியல் நடாத்தி வருகின்றார்கள். இதயசுத்தியுடன் அவர்கள் எதையுமே தமிழர்களுக்கு செய்யவில்லை. அவர்களுக்கு ஆதரவளிப்பது என்பது அரசியல் தற்கொலை செய்வதற்கு ஒப்பானது.

எனவே இந்த அரசாக இருந்தாலும் அவர்கள் தேர்தலை நடாத்தி மக்கள் ஆணையை பெறட்டும். நாங்களும் தேர்தலில் நின்று எமது மக்களின் அணையைப் பெறுவோம். அதுதான் எமது நிலைப்பாடு.

மகிந்தவின் வெற்றி மூலம் தெற்கில் இனவாதம் இன்றும் வலுப்பெற்றுள்ளது என்பது தெளிவாகியுள்ளது. வடக்கு – கிழக்குத் தமிழ் மக்கள் தலைவர் பிரபாகரனை எப்படித் தமது தேசியத்தலைவராக மதிக்கிறார்களோ அதேபோன்று தான் தெற்கில் உள்ள மக்களால் மகிந்த மதிக்கப்படுகின்றார். அவருடன் நாம் முன்னர் 19 சுற்றுப் பேச்சுக்களை நடாத்தினோம். எமது மக்களுக்கு தீர்வு வழங்கப்படக்கூடாது என்பதில் எப்போதும் அவர் தெளிவாக உள்ளார்.

அதுபோலவே இப்போது உள்ள ரணில் – மைத்திரி அரசும் காணாமற்போனவர் விடயம், அரசியல் தீர்வு, மீள்குடியேற்றம், பயங்கரவாத தடைச்சட்டம் நீக்குதல், அரசியல் கைதிகள் விடுதலை ஆகியவற்றில் இந்த அரசு தொடர்ந்தும் மெத்தனப் போக்குடனேயே உள்ளது. அவர்களுக்கு ஆதரவளிக்க வேன்டிய எந்த தேவையும் எமக்கு கிடையாது.

கிளிநொச்சியில் கரைச்சி, பச்சிளைப்பள்ளி, பூநகரி பிரதேச சபைகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும். சந்திரகுமாரின் சுயேட்சை ஆட்சியமைக்கவுள்ளதாக கூறுவது வெறும் பகல் கனவு என்றார்.