மகிந்தவின் மீள் எழுச்சி தமிழர்களை மீண்டும் ஓர் அபாயநிலைக்குள் தள்ளும்: சிறீதரன் பா.உ

தமிழ் அரசுக் கட்சி சார்பில் கனகாம்பிகைக்குளம் வட்டாரத்தில் போட்டியிட்ட என்னை ஆதரித்து வாக்களித்து வெற்றி பெற வைத்த சாந்தபுரம், கனகாம்பிகைக்குளம், தொண்டமான்நகர், திருவையாறு 3ம் பகுதி மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாக குறித்த பகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பரமநாதன் குமாரசிங்கம் தெரிவித்துள்ளார்.

சாந்தபுர மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு பரமநாதன் குமாரசிங்கம் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.

இதில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனும், கிராமப்பிரதிநிதிகள் மற்றும் மக்கள் சாந்தபுர விளையாட்டுக்கழக இளைஞர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

இதில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்,

2018 உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழரசுக் கட்சிக்கு ஆதரவு வழங்கி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மக்கள் தமது வாக்கு எனும் ஆணையின் மூலம் வெற்றி பெறச் செய்துள்ளனர்

இவ்வேளையில் வடக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்வாறு பலமாக உள்ளதோ அதே சம பலத்துடன் தெற்கில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த அணி அதிக படியான வாக்குகளை பெற்று முன்னிலையில் இருப்பதானது சிங்கள மக்கள் மத்தியில் எம் இனத்தை அழித்து சுடுகாடாக்கியவர்களுக்கு முன்னுரிமை வழங்குவதாக காணப்படுகின்றது.

இவ்வாறு சிங்கள மக்கள் மத்தியில் இவ்வாறான மன நிலை காணப்படுவதானது தமிழர் தேசிய விடுதலை பற்றிய கரிசனை அற்றதனையும் தமக்கு ஓர் தார்மீக பொறுப்பு உண்டு என்பதை மறுதளிப்பதாக காணப்படுகின்றது.

இதேவேளை இப்போது ஏற்படுட்டிருக்கும் அரசியல் நிலையில் மகிந்தவின் வரவானது தமிழர்களை மீள ஓர் இறுக்கமான சூழ்நிலைக்கும் பேராபத்திற்கும் கொண்டு செல்வதாக காணப்படுகின்றது.

அத்துடன் ரணில் – மைத்திரி அரசாங்கத்தின் தமிழர் பலத்தை சிதைக்கும் நோக்கம் நிறைவேறுவதாக கூறியதுடன் மீள்குடியோற்றத்தின் போது சாந்தபுர மக்களின் காணிகளை இராணுவம் தன்வசப்படுத்தி விமான நிலைய காணிகளாக மாற்ற முற்பட்ட போது நீங்கள் மழையிலும் வெயிலிளும் பற்றுருதியுடன் நின்று மனம் தளராது இராணுவத்திடம் இருந்து காணிகளை மீட்ட உங்கள் மன நிலையினை பாராட்டுகின்றேன்எனக் கூறினார்.