மன்னார் நகர சபை தலைவராக ஞானப்பிரகாசம் ஜெராட் தெரிவு

மன்னார் நகர சபையின் தலைவராக தமிழீழ விடுதலை இயக்க (டெலோ) கட்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஞானப்பிரகாசம் ஜெராட் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

மன்னார் நகர சபையின் தலைவர் தெரிவு தொடர்பான அவசர கலந்துரையாடல் இன்று மாலை 3 மணியளவில் மன்னார் ஆஹாஸ் விடுதியில் இடம் பெற்றது.

இதன் போது தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா , செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன், சாள்ஸ் நிர்மலநாதன், வடமாகாண அமைச்சர் எஸ். சிவநேசன் ,மாகாணசபை உறுப்பினர் எஸ்.பிரிமூஸ் சிறாய்வா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் மற்றும் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த கலந்துரையாடலின் போதே மன்னார் நகர சபையின் தலைவராக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளில் ஒன்றான தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) கட்சியின் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஞானப்பிரகாசம் ஜெராட் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மேலும் தெரிவிக்கையில்,

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மன்னார் நகர சபை மற்றும் பிரதேச சபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற உறுப்பினர்களுடன் சபைகளை நடத்துவது தொடர்பில் விசேட சந்திப்பு இடம் பெற்றது.

தமிழ் தேசியக்கூட்டமைப்பு மன்னார் மாவட்டத்தில் நகரசபை மற்றும் இரண்டு பிரதேச சபைகளை கைப்பற்றியுள்ளது.

குறித்த சபைகளை நடத்துவது தொடர்பில் முடிவுகள் மேற்கொள்ளப்பட்டது.

சபையில் உறுப்பினர்கள் ஒற்றுமையாக செயற்பட்ட வேண்டும் எனவும், முரண்பாடான செயற்பாடுகளில் ஈடுபடக்கூடாது எனவும்,சபைகளில் எடுக்கின்ற முடிவுகளின் அடிப்படையில் சபைகளை நடத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

சபையின் இருக்கின்ற ஏனைய கட்சி அங்கத்தவர்களோடு தமிழ் தேசியக்கூட்டமைப்பின் அங்கத்தவர்கள் நட்பு ரீதியாக தொடர்பை மேற்கொள்ள முடியும்.

ஆனால் ஏனைய கட்சி அங்கத்தவர்களோடு ஆட்சியை நடத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு கட்சிக்கு எதிராக செயற்பட்டால் உடனடியாக குறித்த நபர் உறுப்பினர் பிரதி நிதித்துவத்தில் இருந்து நீக்கப்படுவதோடு,கட்சியில் இருந்தும் நீக்கப்படுவார். அதற்கான அதிகாரம் கட்சியின் செயலாளர் நாயகத்திற்கு இருக்கின்றது.

மன்னார் நகர சபையின் தலைவர் தெரிவு அறிவிக்கப்பட்டுள்ளது. நகர சபையின் உப தலைவர் மற்றும் ஏனைய சபைகளின் தெரிவுகள் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.