விஜயகலாவின் அறிவிப்பு ஐ.தே.கவின் முடிவல்ல: மாவை

விஜயகலா மகேஸ்வரனின் அறிவிப்பானது ஐக்கிய தேசியக் கட்சியின் முடிவு அல்ல என தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

தமிழரசு கட்சியின் வவுனியா மாவட்ட அலுவலகமான தாயகத்தில் நேற்று த.தே.கூட்டமைப்பின் சார்பில் உள்ளூராட்சி சபையில் போட்டியிட்டு வெற்றி பெற்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.

இதில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் கூறுகையில்,

இது தலைமைத்துவத்தில் உள்ள பிரச்சினை அல்ல. நாட்டு மக்கள் அளித்த தீர்ப்பின் படி ஒன்று பட்டு செயற்பட வேண்டும் என்ற சந்தர்ப்பங்களைதான் நாங்கள் எடுத்துள்ளோம்.

அதன்பிரகாரம் நாங்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க சிவில் சமூகத்தினர், வர்த்தக சமூகத்தினர், புத்திஜீவிகள் எடுக்கின்ற முயற்சிகளுக்கு அவர்கள் மறுப்பு தெரிவித்திருந்தார்கள் என்று நம்பகரமான முடிவு வரும்போதுதான் அவ்வாறான கருத்துக்கு வரலாம்.

எவ்வாறாயினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு மற்றும் கிழக்கில் கைப்பற்றிய 38 சபைகளிலும் தாங்கள் ஆட்சியமைப்பதற்கான உரித்தை கோருவார்கள்.

அதற்கான நடவடிக்கைளில் திட்டவட்டமாக இறங்குவார்கள். எங்களுடைய ஜனநாயக ரீதியான கட்சியில் ஒவ்வொருவரும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

அதிலும் எங்களோடு இணங்கி போகக் கூடியவர்களின் ஆதரவினை பெறுவதற்கான வழிகளை நிச்சயமாக செய்து வருகின்றோம்.

யாருடன் நாங்கள் இணைய வேண்டும், யாருடன் நாங்கள் இணைய முடியாது என்பது அந்த பேச்சுக்களின் முடிவில் தெரியப்படுத்தப்படும்.

விஜயகலா மகேஸ்வரனின் அறிவிப்பானது ஐக்கிய தேசியக் கட்சியின் முடிவு அல்ல. ஐக்கிய தேசியக் கட்சியை பொறுத்த வரை மிகவும் நிதானமாகவும் அவதானமாக இருக்கின்றோம்.

இப்போது இருக்கின்ற அரசாங்கத்திற்கு நாங்கள் எதிர்க்கட்சியில் இருந்து ஆதரவு வழங்குவது எல்லோருக்கும் தெரியும்.

இந்த நிலையில் அவர்கள் ஆதரவாக இருப்பார்களானால் அதை பற்றி உரிய நேரத்தில் பேசலாம் என்று தெரிவித்துள்ளார்.