இரகசிய வாக்கெடுப்புக்கு கூட்டமைப்பு கடும் எதிர்ப்பு

தொங்கு நிலையில் உள்ள உள்ளூராட்சி சபைகளில் தவிசாளர், உப தவிசாளர் தெரிவுகளின் போது இரகசிய வாக்கெடுப்புக்கு கோரிக்கை விடுக்கப்பட்டால் கூட்டமைப்பு அதனை எதிர்க்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம், நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நேற்று பகல் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மேற்படி விடயம் ஆராயப்பட்டு முடிவெடுக்கப்பட்டது.

எந்தவொரு விடயமும் மக்களுக்கு தெரிந்து பகிரங்கமாக இடம்பெற வேண்டும்.

உள்ளூராட்சி சபைகளில் தவிசாளர், உப தவிசாளர் தெரிவுகளின்போது இரகசிய வாக்கெடுப்பு நடத்துவதற்கு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கோரும் என்று அந்தக் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இரகசிய வாக்கெடுப்பு கோருவதை எதிர்ப்பதற்கு முடிவு செய்துள்ளது.

யாருடன் கூட்டுச் சேர்வது என்பது தொடர்பில் வெளிப்படைத்தன்மை இருக்கவேண்டும். நாங்கள் இரகசிய வாக்கெடுப்புக்கு இணங்கமாட்டோம்.

மற்றையவர்களும் இரகசிய வாக்கெடுப்பு கோரக் கூடாது என்பதுதான் எங்களின் நிலைப்பாடு. மக்களின் வாக்குகளால் வந்த முதலாவது கூட்டத்திலேயே, மக்களுக்குத் தெரியாமல் ஒழித்து பேரம்பேசி வாங்கி விற்று அரசியல் நடத்துவது மிக மிகக் கேவலமான விடயம்.

யார் யாருடன் கூட்டுச் சேர்கின்றார்கள் என்பது மக்களுக்குத் தெரிய வேண்டும். இரகசிய வாக்கெடுப்பை நாங்கள் கோரவும் மாட்டோம். இரகசிய வாக்கெடுப்புக் கோரினால் நாங்கள் அதனை எதிர்ப்போம் என்றும் சுமந்திரன் தெரிவித்தார்.