தமிழ்க் கட்சிகள் ஒன்றுபட வேண்டும்: சிறிகாந்தா!

சிங்களப் பேரினவாதத்துக்கு எதிராகவும், தமிழ் மக்களின் அரசியல் இருப்புக்காகவும், தமிழ்க் கட்சிகள் பொதுக் கொள்கையின்கீழ் ஒன்றுபட வேண்டும் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ரெலோவின் செயலருமான ந.சிறிகாந்தா எச்சரிக்கை ஒலியுடன் அழைப்பையும் விடுத்துள்ளார்.

தமிழர் தாயகத்தின் நிகழ்கால அரசியல் போக்கைப் பொறுத்த வரையில் அவரின் அழைப்பு சரியானது, காலத்தின் தேவையானது, கட்டாயமானதும்கூட.

உள்ளூராட்சித் தேர்தல் முடிவடைந்து சுமார் இரண்டு வாரங்கள் ஓடி மறைகின்றன. ஆனால் ஆட்சியமைப்பது தொடர்பில் இன்றும் நிலையான, உறுதிப்பாடுடைய, கனதியான முடிவுகள் எவையும் எட்டப்படவில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொதுக் கொள்கையின் கீழ் ஒன்றிணைந்து ஆட்சியமைப்பதற்கு அழைப்பு விடுத்துள்ள போதிலும் ஏனைய கட்சிகள் சாதகமான நகர்வுகள் எதனையும் வெளிப்படுத்தவில்லை.

அற்பனுக்குப் பவுசு வந்தால், அர்த்தராத்திரியில் குடை பிடிப்பான் என்ற பழமொழி தற்போது இங்குள்ள அரசியல் கள நிலவரங்களுக்கு மெத்தவும் பொருந்தவே செய்கிறது.

தேர்தல் காலங்களின் போதிருந்த பருவ கால மோதல்களும் பரஸ்பரக் குற்றச்சாட்டுக்களும் தேர்தல் கடந்தும் தற்போதும் அவ்வப்போது தொடரவே செய்கின்றன.

பொதுக் கொள்கைகள் என்ற கோட்பாட்டில் தத்தமது கட்சிக் கொள்கைகளைப் புகுத்தி இடியப்பச் சிக்கல் நிலைக்கு தமிழர் தாயக அரசியல் நிலவரத்தை கொண்டு சென்று விட்டுள்ளன இந்தக் கட்சிகள்.

வாக்களித்த மக்களின் தேவைகளை, அபிலாசைகளை, கோரிக்கைகளை விடவும் அதிகாரக் கதிரைகள் அரசியல் பிரதிநிதிகளை தற்போது ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கின்றன,

அதேவேளை, கொழும்பு அரசியல் உச்சக்கட்டக் குழப்பத்தில் உள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான கூட்டு அரசு தொடருமா என்ற சந்தேகம் தற்போது வலுவாகவே எழுந்துள்ளது.

அப்படித் தொடர்ந்தாலும் இதுவரை காலமும் அரசுக்குள் இருந்த இணக்கம் இனிமேலும் இருக்காது, இருக்க வாய்ப்பில்லை.

சிறிலங்கா சுதந்திரக்கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி இரண்டும் இணக்கத்துடன் இணைந்து ஆட்சியமைத்த போதே தமிழர்களின் அபிலாசைகள் தீர்க்கப்படவில்லை.

இவ்வாறிருக்க, கொழும்பு அரசியலில் ஏற்பட்டுள்ள இந்த முறுகல் நிலைக்கு மத்தியில் தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்ற எண்ணவோட்டத்தை தமிழர் தாயக மக்கள் பலர் கைவிட்டுள்ளனர். சிலர் படிப்படியாக கைவிட ஆரம்பித்துள்ளனர்.

புதிய அரசமைப்பு உருவாக்கமும் தொங்குநிலையே. இவ்வாறான பின்னணியில் தமிழ்க் கட்சிகள் பொதுக் கொள்கையின் கீழ் இணைந்தாலேயே, எதையும் சாதிக்க முடியாவிட்டாலும், குறைந்த பட்சம் எதிர்ப்பையாவது ஓங்கி, உரத்துப் பதிவு செய்யலாம்.

வடமாகாண சபையின் ஆயுட்காலம் எதிர்வரும் செப்ரெம்பர் மாதத்துடன் முடிவுக்கு வருகிறது. மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் எதிர்வரும் செப்ரெம்பர் மாதமளவில் நடத்தப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய அண்மையில் தெரிவித்திருந்தார்.

எப்படிப் பார்த்தாலும் இந்த வருடத்துக்குள் வடக்கு மாகாண சபைக்குரிய தேர்தலுக்கு அதிக வாய்ப்புக்கள் இருக்கவே செய்கின்றன.உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னர் நடக்கும் அரசியல் நகர்வுகளை மக்கள் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.