இந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை கூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்

ஒருவலிமையான அரசியல் ரீதியான நெருக்குதலை இந்திய அரசாங்கம் இலங்கை அரசாங்கத்திற்குக் கொடுத்து இந்த நாட்டில் இணைப்பாட்சியை உண்டுபண்ண வழி அமைக்க வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்.இந்திய துணைத்தூதுவர் நடராஜனுக்கு இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில், யாழ். கிறீன் கிறாஸ் விருந்தினர் விடுதியில் நேற்று இரவு கௌரவிப்பு நிகழ்வு நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதை குறிப்பிட்டார்.

தொடர்ந்து தெரிவிக்கையில்,

யாழ்ப்பாணத்தில் துணைத்தூதுவர் அலுவலகம் நிறுவப்பட்டகாலத்தில் இருந்து துணைத்தூதுவர்களாக தமிழர்கள் அல்லது தமிழ் பேசக்கூடிய அதிகாரிகள் இங்கு நியமிக்கப்பட்டமை மிகப் பெரிய வரப்பிரசாதமாகும்.

நடராஜன் அவர்கள் கடந்த மூன்று ஆண்டுகளில் வடபகுதி தமிழ் மக்களுக்கு ஆற்றியபணிகள் அளப்பரியன. அதேநேரம் அவர் தெரிந்து வைத்திருக்கும் எம் மக்கட் தொகை கணக்கில் அடங்காதவை.

நடராஜன் அவர்கள் யாழ்ப்பாணத்துத் துணைத்தூதுவராக பதவியேற்ற ஒருசில நாட்களுக்குள்ளேயே இங்கிருந்த மாணவர்களுக்கும் அரச உத்தியோகத்தர்களுக்கும் பல்வேறு புலமைப் பரிசில் திட்டங்களைத் தயாரித்தார்.

அவற்றின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களையும் உத்தியோகத்தர்களையும் முழுக்க முழுக்க இந்தியஅரசின் நிதிஉதவியுடன் இந்தியாவுக்கு அனுப்பி அவர்களுடைய கற்கைநெறிகளை முழுமையாக பூர்த்திசெய்து கொண்டு மீண்டும் இலங்கைக்குத் திரும்புகின்ற காலவரைக்கு அவர்களுக்கான ஒருவிசேட படியையும் பெற்றுக் கொடுத்தார். இவற்றை எம்மவர் நன்றியுடன் நினைவு கூருகின்றார்கள்.

வெளிநாடுகளுடனான இராஜதந்திர பேச்சுவார்த்தைகளில் .நடராஜனும் முக்கிய பங்குவகித்தமை இத் தருணத்தில் குறிப்பிடற்பாலது.

இந்தியர்களின் மூளை சவர அலகைவிடக் கூர்மையானது என்ற கூற்றுக்கு அமைவாக நடராஜன் மிகவும் மதிநுட்பம் வாய்ந்தவர். தமது காரியங்களை வட பகுதிமண்ணில் ஆற்றுகின்ற போதுமிகக் கவனமாக அரசியல்த் தலைவர்கள் மற்றும் ஆட்சியாளர்களுக்கிடையே குழப்பங்கள் ஏற்படாத வகையில், ஒவ்வொரு நிகழ்வுகளுக்கும் யாரை அழைக்கலாம் யாரை அழைக்கக்கூடாது என்ற சூட்சுமங்களையெல்லாம் நன்றாகப் புரிந்துவைத்துக் கொண்டு தமது நடவடிக்கைகளை ஆற்றிச் சென்றார்.

நடராஜன் அவர்கள் ஒருதமிழர் என்றவகையில் தானாடா விட்டாலும் தன் தசைஆடும் என்ற முதுமொழிக்கு அமைவாக தமிழர்களின் பிரச்சனைகளை தீர்த்து வைப்பதற்கு தன்னாலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டமை நன்றியுணர்வுடன் நினைவு கூரற்பாலது.

எம்மை விட்டு பிரிந்து செல்ல இருக்கும் நடராஜன் அவர்கள் இந்தியாவில் நியூடெல்கியில் பணிபுரிந்தாலும் எமது பிரச்சனைகள் தொடர்பாக கூடிய கவனங்கள் எடுத்து ஒரு சமரசத் தீர்வு ஏற்படுவதற்கு வழி சமைக்கவேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.

இந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை வடமாகாண முதலமைச்சரின் அமைச்சின் வெகுமதியூடாகக் கூறி வைக்கின்றேன்.

அண்மைக் காலமாக இலங்கை சம்பந்தமான இந்திய வெளியுறவுக் கொள்கை வெறும் பொருளாதார வசதிகளைப் பெற்றுக் கொடுப்பதிலேயே கவனம் செலுத்தியது.

இனியாவது ஒருவலிமையான அரசியல் ரீதியான நெருக்குதலை எம் மத்திய அரசாங்கத்திற்குக் கொடுத்து இந் நாட்டில் இணைப்பாட்சியை உண்டுபண்ண வழி அமைக்க வேண்டும்.

பதின்மூன்றாவது திருத்தச்சட்டம் கூட இந்தியாவின் அறிவுரைக்கு ஏற்பதயாரிக்கப்படவில்லை. 1992ம் ஆண்டில் அதில் தரப்பட்டசொற்ப அதிகாரங்களும் மத்திய அரசினால் தட்டிப்பறித்து எடுத்துக் கொள்ளப்பட்டது.

இனியாவது ஒருவிறுவிறுப்பான வெளியுறவுக் கொள்கையைக் கடைப்பிடியுங்கள் என்று கோரிக்கொள்கின்றேன் என முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.