தமிழர்களின் பிரச்சினைகளை தீர்க்க வேறுபட்ட அரசியல் கொள்கைகளை கையாள வேண்டும்: வியாளேந்திரன்

கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களுக்கு உருவாகியுள்ள பல்வேறு பிரச்சினைகளை தீர்ப்பதற்கு வேறுபட்ட அரசியல் கொள்கைகளை கையாள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாளேந்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு – ஏறாவூர்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட சவுக்கடி, சிவபுரத்தில் அமைக்கப்படவுள்ள பல்நோக்கு மண்டபத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று காலை நடைபெற்றுள்ளது. தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

இப்பகுதியில் உள்ள மாணவிகள் குடியிருப்பில் உள்ள பாடசாலைக்கு செல்லும்போது பல இடங்களில் பல பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்.

சவுக்கடி பாடசாலையினை கா.பொ.த சாதாரணதரம் வரையில் தரமுயர்த்துவதன் மூலம் இப்பகுதி மாணவர்கள் இங்கு கல்வி கற்கும் வாய்ப்பினை பெறமுடியும். எமது மக்களின் தேவைகளை கருத்தில்கொண்டு நாங்கள் இணைந்து செயற்படவேண்டும்.

குறிப்பாக சொல்லப்போனால் வட மாகாணத்தின் அரசியல் நிலமை என்பதுவேறு, கிழக்கு மாகாணத்தில் அரசியல் நிலமையென்பது வேறு.

கிழக்கு மாகாணத்தினை பொறுத்தவரையில் தமிழ் மக்கள் பாரிய காணிப்பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர்.

இன்று படுவான்கரைப் பகுதியில் உள்ள தமிழர்களுக்கு சொந்தமான காணிகள் பல வழிகளிலும் சூறையாடப்பட்டு வருகின்றன.

அதற்கு அப்பால் வனஇலாகா, வனஜீவராசிகள் திணைக்களம், மகாவலி அதிகாரசபை என பல திணைக்களங்களை சேர்ந்தவர்களும் வந்து மக்கள் வசித்த காணிகளில் கற்களையிட்டு தமது பகுதியாக பிரகடனப்படுத்தும் நிலையும் இருந்து வருகின்றது என தெரிவித்துள்ளார்.