பயங்கரவாத சட்டத்தை விட மிக ஆபத்தான ஒன்று மகாவலி எல். வலய செயற்றிட்டம்: ரவிகரன்

முல்லைத்தீவு மாவட்டத்தில் மகாவலி என்ற பெயரிலான நில அபகரிப்புக்கள் இலங்கையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தை விட ஆபத்தானதாக உள்ளது என வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக தமிழரின் காணிகள் அபகரிக்கப்பட்டு வருகின்றமை தொடர்பில் நேற்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில்,

கடந்த 1983ஆம் ஆண்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் பூர்வீகமாக வாழ்ந்த தமிழ் மக்களை வெளியேற்றி விட்டு அவர்களது நிலங்களை அபகரித்து சிங்கள மக்களுக்கு வழங்குகின்ற செயற்பாட்டை கடந்த அரசாங்கம் செய்துள்ளது அதே வேலையை இந்த அரசாங்கமும் செய்து வருகின்றது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி ஆகிய பகுதிகளிலும் குமுழமுனைப் பகுதியிலும் வாழும் மக்களுக்கு சொந்தமான சுமார் இரண்டாயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட வயல் நிலங்கள், சிறிய குளங்கள் என்பன ஏற்கனவே அபகரிக்கப்பட்டு மகாவலி எல். வலயம் என்ற போர்வையில் சிங்கள மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

மகாவலி எல். வலயம் என்ற போர்வையில் இடம்பெறும் நில அபகரிப்புக்களில் தமிழ் மக்கள் ஒருவருக்கு கூட காணிகள் கிடைக்கவில்லை.

இது முழுமையாக சிங்கள மயமாக்கும் செயற்பாடாகும். முல்லைத்தீவு மாவட்டத்தின் வெலி ஓயா பகுதி முழுமையாக விழுங்கப்பட்டு முல்லைத்தீவு நகரம் வரை நில அபகரிக்கப்புக்கள் நகர்ந்து கொண்டுள்ளன.

கிபுல் ஓயா என்ற பெயரிலும் அபகரிப்புக்கள் நடைபெறுகின்றன. இவ்வாறு நிலங்களை அபகரித்து முல்லைத்தீவை முழுமையாக ஆக்கிரமிக்கும் நோக்கில் இவ்வாறான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இலங்கையில் பயங்கரவாத சட்டம் எவ்வாறு தமிழ் மக்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்துகின்றதோ அதை விட ஆபத்தான ஒன்றாகவே மகாவலி எல். வலயம் காணப்படுகின்றது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.