பரவலாக இடம்பெறும் விசமிகளின் செயற்பாடு: ரவிகரன்

அண்மைக்காலமாக வட பகுதி எங்கும் சைவ கோவில்கள் உடைக்கப்படுகின்ற சம்பவங்கள் பரவலாக இடம்பெற்று வருகின்ற நிலையில் இவற்றை வன்மையாக கண்டிப்பதாக வட மாகாணசபை உறுப்பினர் ரவிகரன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு – முள்ளியவளைப் பகுதியில் காணப்படும் கோட்டை ஐயனார் கோவிலில் இருந்த சிலைகள் அண்மையில் விசமிகளால் உடைக்கப்பட்டன.

இந்த நிலையில் குறித்த இடத்திற்கு நேரடியாக சென்று பார்வையிட்டு பின் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் கூறுகையில்,

வட பகுதியின் மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் போன்ற மாவட்டங்களில் காணப்படுகின்ற சைவ கோவில்கள் இனந்தெரியாத விசமிகளால் உடைக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது முல்லைத்தீவு மாவட்டத்திலும் அவ்வாறானதொரு சம்பவம் நடந்தேறியிருக்கின்றது.

எமது நாட்டில் பலதரப்பட்ட சமயத்தவர்கள் வாழ்கின்றார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் தத்தமது சமய தலங்களில் வழிபாடு செய்வதற்கு உரிமை இருக்கின்றது.

ஒருபோதும் இன்னொரு சமயத்தவரின் வழிபாட்டுத் தலங்களையோ அல்லது சமய அடையாளங்களையோ சிதைப்பதற்கு உரிமையில்லை.

இத்தகைய செயற்பாடுகள் நாட்டில் வாழ்கின்ற மக்களிடையே காணப்படும் ஒற்றுமையைச் சீர்குலைத்து மத மோதல்களை தோற்றுவிக்கும்.

அத்தோடு இது போன்ற செயற்பாடுகளை மிக வன்மையாக கண்டிக்கின்றேன். எனவே உரிய தரப்பினர் இத்தகைய செயற்பாடுகளில் ஈடுபடுகின்றவர்களை இனங்கண்டு சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.