பல கோடி ரூபா செலவில் பயன்படாத அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்டதாக சிறீதரன் எம்.பி தெரிவிப்பு

கடந்த காலத்தில் காட்டாட்சி நடத்தியவர்கள் பல கோடி ரூபா செலவில் மக்களுக்கு பயன்படாத வகையிலான அபிவிருத்திகளை மேற்கொண்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட பொதுவைத்தியசாலை வளாகத்தில் அமைக்கப்படவுள்ள பெண் நோயியல் வைத்தியசாலையை அமைப்பது தொடர்பான கலந்துரையாடல் அண்மையில் இடம்பெற்றுள்ளது.

இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

கிளிநொச்சி மாவட்டத்தின் வைத்தியத்துறை என்பது எதிர்கால நோக்கத்தோடு கட்டியெழுப்பப்பட வேண்டும்.

இப்போது கிடைத்திருக்கின்ற இந்த வட மாகாணத்திற்கான பெண்நோயியல் வைத்தியசாலையை நன்கு திட்டமிட்டு உரிய வகையில் அமைப்பதற்கு அனைத்து தரப்பும் ஒத்துழைக்க வேண்டும்.

அத்தோடு அனைவரது கருத்துக்களும் உள்வாங்கப்பட்டு உரிய முறையில் அமைக்கப்பட வேண்டும். இதனை இல்லாமல் செய்வதற்கும், குழப்புவதற்கும் பல தீய சக்திகள் முனைப்புக்காட்டுகின்றன.

கடந்த ஆட்சிக்காலத்தில் கிளிநொச்சி மாவட்டத்தில் அபிவிருத்தியை தீர்மானித்தவர்கள், காட்டாட்சியை நடத்தியவர்கள் பல கோடி ரூபா செலவில் மேற்கொண்ட அபிவிருத்திகள் மக்களுக்கு பயன்படாத விதத்தில் காணப்படுகின்றன.

குறிப்பாக, கிளிநொச்சி அம்பாள்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள பொருளாதார நிலையம், கிளிநொச்சி நகரத்தில் அமைக்கப்பட்டு வருகின்ற சர்வதேச மைதானம் என்பன நல்ல எடுத்துக்காட்டாக அமைந்துள்ளன.

இதேவேளை பெருந்தொகை நிதிகளை பயன்படுத்தி புனரமைக்கப்பட்ட ஜெயந்திநகர், உருத்திரபுரம் வீதி மற்றும் பாலங்கள் என்பன சேதமடைந்து மக்கள் பயன்படுத்த முடியாத வகையில் காணப்படுகின்றன.

எனவே மேற்கொள்ளப்படும் அபிவிருத்திகள் இவற்றை போன்று இல்லாமல் நீண்ட கால நோக்கோடு உரிய முறையில் முன்னெடுக்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.