மக்களுக்கான தெய்வீகக் கதையை எடுத்துக் கூறுவதற்கு கதாகாலட்சேப முறைமையே அதி சிறந்தது: விக்னேஸ்வரன்

சினிமா நடைமுறைக்கு வராத காலத்தில் எமது மக்களுக்கான தெய்வீகக் கதைகளையும், திருவிளையாடல்களையும் எடுத்துக் கூறுவதற்கு கதாகாலட்சேப முறைமையே அதி சிறந்த பொறிமுறையாக இருந்தது. இதனை இலகுவில் முன்னெடுத்துச் செல்ல கர்நாடக சங்கீதம் அதற்குப் பக்க பலமாக அமைந்தது என வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ். நல்லூர் ஞானசம்பந்தர் ஆதீன மண்டபத்தில் இன்று இடம்பெற்ற நூல் வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

கதாபிரசங்கக் கலை என்பது இசைப்பாடல்களோடு இனிய கதைகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் கேட்டு இரசிக்கக்கூடிய வகையில் எடுத்துக் கூறுகின்ற ஒரு பாரம்பரியக் கலைமுறைமையாகும்.

தனியொருவர் இசைப்பாடல்களோடு இணைந்து ஒரு கதையை மக்கள் ஆர்வத்துடன் கேட்டு மகிழக்கூடிய வகையில் ஆற்றுப்படுத்தப்படுகின்ற ஒரு கலையாக இதனைக் கூறமுடியும்.

சைவச்சிறார்களுக்கு சைவசமயம் பற்றிய போதனைகளை வழங்குவதற்கு பிரசங்க முறைமையே மிகப் பொருத்தமானது என்ற கோட்பாட்டில் வண்ணார்பண்ணை வைத்தீஸ்வரன் ஆலயத்தில் 1847 டிசம்பர் 31ம் திகதி ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் அவர்களால் முதன் முதலில் ஆரம்பித்து வைக்கப்பட்ட கதாபிரசங்க முறைமையே பின்நாளில் பல மெருகூட்டல்களுடனும் பக்க வாத்தியங்களுடனும் மக்கள் மனதை ஈர்க்கும் கலையாக பரிணமித்தது.

தமது கதாபிரசங்க முறைமையினால் உலகையே வலம் வந்த சுவாமி கிருபானந்தவாரியாராலும் நல்லை ஆதீன முதலாவது குருமகா சந்நிதானம் மணிபாகவதராலும் இந்தக் கலை சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.

சங்கீத கதாபிரசங்கம் என்றவுடன் எமது நினைவுக்கு வருபவர்கள் தென்னிந்தியாவில் சுவாமி கிருபானந்தவாரியாரும் அதே போன்று இலங்கையில் மணிபாகவதரம் ஆவரார்.

அவரின் பழுத்த சிவப்பழமான தோற்றப் பொலிவுடன் கிருபானந்தவாரியார் அவர்கள் மேடையில் அமர்ந்து ‘கைத்தல நிறைகனி’ என்று ஆரம்பித்து நகைச்சுவைகளுடன் கூடிய கதாபிரசங்க முறைமையை அவருக்கே உரிய ஒரு தனியான பாணியில் வெளியிட்டு வந்தமை சற்று வயது வந்தோருக்கெல்லாம் நினைவிருக்கும்.

அதே போன்று மணிபாகவதர் அவர்களும் யாழ்ப்பாண இசைப்பாரம்பரிய மரபிலே கணீர் என்ற குரலில் கதாப்பிரசங்கம் நடாத்தியமை இன்னும் சில வருடங்கள் மூத்தவர்களால் கண்டும் கேட்டும் இருந்திருக்கப்படும்.

என் இளமைக் காலத்தில் மணிபாகவதர் கதா காலட்சேபம் என்றால் தவறாது போய் முன் வரிசையில் இருந்து கேட்டு இன்புறுவேன். அவரின் வழியில் பின்னர் தோன்றிய பிரசங்கிமார்கள் கதாப்பிரசங்கத்தை சிறப்பாக ஆற்றுவதற்கு இலங்கையில் வித்திட்டவர் மணிபாகவதரேயாவார்.

நாவலர் பெருமானின் காலத்தில் பக்கவாத்திய இசைகளுடன் கூடிய கதாபிரசங்க முறைமையை முன்னெடுத்துச் செல்வதற்கான வசதிகள் இல்லாதிருந்தன.

அப்படியிருந்தும் அவர் சைவசித்தாந்தக் கதைகளிலும் புராணக்கதைகளிலும் பெற்றிருந்த அதீத அறிவு காரணமாக சைவசித்தாந்தத் தத்துவங்களை கதாபிரசங்க வடிவில் இசையுடன் சேர்த்து மக்களுக்கு எடுத்துக் கூறியதன் மூலம் இலகுவில் சைவச்சிறார்களின் மனதில் அவர்களின் சமய நீதிகளையும் கருத்துக்களையும் பதியவைக்கின்ற நிகழ்வை அவர் சிறப்புற ஆற்றியிருந்தார்.

உண்மையில் சினிமாவுடன் கூடிய மெல்லிசை முன்னணிக்கு வர முன் என்னுடைய குழந்தைப் பிராயத்தில் எல்லாம் அக் காலத்தைய கர்நாடக இசை மேதைகளின் சங்கதிகளையே முணுமுணுத்துக் கொண்டிருப்போம்.

இந்த நிலையில், வி.வி.சடகோபன், துறையூர் இராஜ கோபால சர்மா, ஜி.என்.பாலசுப்பிரமணியம், முசிறி சுப்பிரமணிய ஐயர், N.சு.வசந்தகோகிலம், னு.மு.பட்டம்மாள் போன்றவர்களின் கர்நாடக பாடல்களையே ‘ஆல் இந்தியா ரேடியோ’ வின் திருச்சி வானொலி நிலையம் அக்காலத்தில் ஒலிபரப்பிக் கொண்டிருந்தது.

இயல், இசை, நாடகம் ஆகிய முப்பரிமாணங்களையும் கொண்ட கலைவடிவமாக அமைந்த கதாபிரசங்க முறைமை சமயக் கதைகளையும் மற்றும் சமய வரலாறுகளையும் எடுத்துக் கூறுவதற்கு ஏற்ற ஒரு வடிவமாக காணப்பட்டமையால் இலங்கையில் கிறிஸ்தவ மதத்தைப் பரப்பும் நோக்கில் உள் நுழைந்த அமெரிக்கத் திருச்சபைகளும் மற்றும் தென்னிந்தியத் திருச்சபைகளும் எமது கதாகாலட்சேப முறைமையை உள்வாங்கி அவற்றின் கட்டமைப்புக்களுள் சில மாற்றங்களை உருவாக்கி நளினங்களுடன் கூடிய ஒரு கூத்து வடிவமாக அக்கலையை மக்கள் முன் காட்சிப்படுத்தினார்கள்.

அவர்களின் சமயப்பரம்பல்களுக்கு இம்முறைகளைப் பயன்படுத்தியமை பின்நாளில் தென்மோடிக்கூத்து வடிவத்திற்கு ஒப்பானதாக அது உணரப்பட்டது.

அதே போன்று இந்தியாவிலும் குறிப்பாக தமிழகத்தில் ஹரிகதை, இசைக்கதை, சிவகதை, காலட்சேபம், புராண இசை, உபந்நியாசம் எனப்பல பெயர்களுடன் இம்முறைமை மேடையேற்றப்பட்டு வந்தது.

தற்போதும் இந்தியாவில் மிகச் சிறந்த கதாகாலட்சேப வித்துவமாணியாகிய வித்துவம் நிரம்பிய ஸ்ரீமதி விஷாகா ஹரின் கதாப்பிரசங்க முறைமையும் மிகவும் எளிமையான இசை வடிவத்துடன் கூடிய கதையைக் கொண்டு செல்லும் விதமாக அமைந்துள்ளது.

அவரின் ஆற்றல் அனைவரையும் மெய்சிலிர்க்க வைக்கின்றது. இளமையில் கல்வியில் மிகச் சிறந்து விளங்கிய திருமதி ஹரி அவர்கள் இரசாயனவியல் கற்கைநெறியில் 200/200 என்ற புள்ளியடிப்படையில் உயர்தர விஞ்ஞானக் கற்கை நெறியில் தேறியபோதும் தாய் தந்தையர் பிரியப்பட்ட மருத்துவ கற்கைநெறித்தேர்வுக்கு முழுக்குப்போட்டு விட்டு வர்த்தகம் புவியியல் பாடங்களைத் தெரிவுசெய்து தனது கலைமாணிப்பட்டத்தை பெற்ற பின்னர், ஓர் வங்கி உயர் அதிகாரியாகவோ அல்லது நிர்வாக தலைமைத்துவப் பொறுப்பாளராகவோ வர விரும்பவில்லை. முழுநேர கதாப்பிரசங்க நிகழ்வுகளில் ஈடுபட்டு இன்று உயர் நிலையில் இருப்பது வரவேற்பிற்குரியது.

அத்துடன், ஹரின் பெயரை உள்நுழைத்தமைக்குக் காரணம் கதாப்பிரசங்க நிகழ்வுகளை ஆற்றுவது மருத்துவத்துறைக்கும் நிர்வாக உயரதிகாரி தரத்திற்கும் ஒப்பானதே என எடுத்துக்காட்டியவர் அவரே என்பதாலாகும்.

எனது பத்து பதினொராம் வயதில் எனக்கிருந்த வாழ்க்கையின் குறிக்கோள் சிறந்த கர்நாடக இசை விற்பன்னராக வர வேண்டும் என்பது.

ஆனால் தெருவில் சென்ற ஒரு கர்நாடக இசைப் பயிற்றுவிப்பாளரைக் காட்டி என் தாயார் ‘இவர் போல் தெருத்தெருவாய் அலைய வேண்டிவரும் நீ கர்நாடக இசையைத் தேர்ந்தெடுத்தால்’ என்று கூறி என் இசைப் பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.

எங்கள் குடும்பத்தில் இருந்த சட்டத்தரணிகள் பலரைக் குறிப்பிட்டு அவர்கள் போல் சட்டத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கண்டிப்பாய் கூறிவிட்டார். ஆகவே தான் சங்கீதத்தை விட்டு சங்கடமான சட்டத்தினுள் உள்நுழைய வேண்டிவந்தது.

சமய தத்துவங்களையும் கருத்துக்களையும் பாடி ஆடி இசைந்த முறையில் வெளிக்கொண்டுவருவதே கதாகாலட்சேபம்.

சமய புராண வரலாறுகளை இசைப்பாடல்களாக்கி சாகித்திய பண்ணமைத்து பக்க வாத்திய இசையால் மெருகூட்டச் செய்து பிரசங்கிக்கும் கதாப்பிரசங்க முறைமை ஏனைய பிரசங்க முறைமைகளை விட சற்றுக் கடினமானது.

இக்கலைக்கு நிறைந்த புராண இதிகாச அறிவும் இலக்கண இலக்கிய பயிற்சிகளும் கருத்துக்களைக் கோர்வையாக்கி கதைகளாக்கும் தன்மையும் சிறப்பான இசைஞானமும் கூடவே ஆசார முறைமையும் அலங்காரமும் இருந்தே ஆக வேண்டும் என்றும் நூலாசிரியர் கூறியுள்ளார் தமது நூலில்.

சிறந்த மேடைப் பேச்சாளர்களோ அல்லது சங்கீத வித்துவான்களோ சிறந்த கதாப்பிரசங்கிகளாக ஆகிவிடமுடியாது. மாறாக இயல் வழிவந்த இசையும் அதன்மூலம் வெளிப்படுத்துகின்ற நாடகத்தோற்றமுமே கதாப்பிரசங்கத்திற்கு அத்தியாவசியமானவை. அந்தவகையில் இயல், இசை, நாடகம் மூன்றையும் கலந்து வெளிக்கொண்டுவருவதே கதாப்பிரசங்கக் கலை.

கதாப்பிரசங்க பயிலுகைக்கு இந்தியாவில் விசேடமாக தஞ்சையில் கரந்தை என்னும் இடத்தில் பயிற்சிக் கல்லூரியொன்று அமைந்திருப்பதாக கூறப்படுகின்றது. எனினும் இங்கு அவ்வாறான பயிற்சிக்கல்லூரிகள் எதுவும் இல்லை.

அந்த நிலையில் சைவக் கோவில்களிலும், நல்லை ஆதினத்திலும், இன்னும் பல சைவ அபிவிருத்தி மன்றங்களிலும் அறநெறிப்பாடசாலைகளை அமைத்து அங்கு பயிலுகின்ற பிள்ளைகளில் கதாகாலட்சேபத்தில் விருப்புடைய பிள்ளைகளுக்கு விசேட பயிற்சிகளை அளிக்க நாம் முன்வர வேண்டும். நாவலரை நினைவுறுத்தும் இந்தக் கலை அழியாமல் பார்த்துக்கொள்வது எமது தலையாய கடமையாகும்.

எமது பிள்ளைகளுக்கு இக் கலையில் நாட்டத்தை உண்டு பண்ணக் கூடிய வகையில் இன்றைய நூல் ஆசிரியர் ஸ்ரீ.தயாளன் மற்றும் நித்தியானந்த சர்மா, பேராசிரியர் கனக நாகேஸ்வரன் போன்ற கதாப்பிரசங்கிகளின் நிகழ்ச்சிகளை ஞாயிற்றுக் கிழமைகளில் நல்லை ஆதின மண்டபத்திலும் மற்றும் ஆலயங்களிலும் நடாத்த நாம் முன்வர வேண்டும்.

அவ்வாறானதொரு காரியத்தால் சமய அறிவுடன் கூடிய இலக்கிய சுவைகளையும் கதாகாலட்சேப முறையையும் மாணவர்களுக்கு புகட்ட நாம் முன்வரவேண்டும்.

இவ்வாறான சேவைகளை மேற்குறிப்பிட்ட கதாப்பிரசங்கிகள் எந்தவித பிரதி உபகாரத்தையும் எதிர்பாராது மேற்கொள்ள காத்திருக்கின்றார்கள் என்ற நல்ல செய்தி என்னிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுவயது முதலே இறைபக்தியும் புராண இதிகாசங்கள் பற்றிய அறிவுத்தேடல்களில் நாட்டமும் இசையோடு கதைசெய்யும் கதாப்பிரசங்க முறைமையிலும் அதிக ஆர்வம் கொண்டிருந்த ஸ்ரீதயாளன் ஆரம்ப காலத்தில் கம்பன் கழக விரிவாக்கங்களின் போது கழகத்துடன் இணைந்து பல வழக்காடு மன்றங்களில் பங்குபற்றினார்.

மேலும் நாடகங்கள், இராமாயணப் பேச்சுக்கள் என எமது இலக்கிய வட்டத்திற்குள் உட்புகுந்து அங்கு தன் பெயரை நிலைநாட்டி இருந்தார். அக்காலத்தில் இராமாயணத்தின் ‘கூனி’ வேடத்தை திறம்பட ஆற்றியதால் இவருக்கு இராமாயணக்கூனி என்ற பட்டப் பெயரும் சூட்டப்பட்டது.

எனினும் இவருக்கு இசை மீதும் கர்நாடக சங்கீதம் மீதுந்தான் அதிக ஆர்வம் இருந்தது. அதன் காரணமாக அந்தத்துறையில் பிரகாசிக்க விரும்பி கதாப்பிரசங்க நிகழ்வுகளுக்குள் தம்மை உட்படுத்திக் கொண்டு இன்று கதாப்பிரசங்க கலை பற்றிய ஒரு நூலை உருவாக்குவதற்குரிய திறமையைப் பெற்றிருக்கிறார் என்றால் இது அவரின் பிறப்பு வழி பெற்றுக்கொண்ட இறையருள் என்றே கூறவேண்டும்.

இடையில் சில காலம் அரசியல் பின்புலங்களுடன் இணைந்து தமது அரச பணியை முன்னெடுத்துச் சென்றபோதும் ஓய்வுகாலத்தின் பின்னர் முற்று முழுதாக இறைபணியுடன் கூடிய பொதுப்பணிகளில் தம்மை இணைத்துக்கொண்டிருப்பது எமக்கு மகிழ்வைத்தருகின்றது.

ஓய்வு காலத்தில் வீட்டுடன் ஓய்ந்துவிடாது முழுமையாக இறைபணியுடன் தம்மை இணைத்துக் கொண்டு இவ்வாறான படைப்புக்களையும் நூல்களையும் வெளியிடுகின்ற திரு ஸ்ரீதயாளனின் பொதுப்பணியை பாராட்டுவதுடன், கதாப்பிரசங்க நிகழ்வுகளில் ஈடுபாடுகளுடைய இளஞ்சிறார்களுள் ஒரு தொகுதியினரையாவது அந்தத்துறையில் வளர்ச்சி பெறுவதற்கு அவர் முயல வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் கதாப்பிரசங்க முறைமைக்கு தனிச்சிறப்பை முதன் முதலில் தேடித்தந்த நல்லை குருமகாசந்நிதானம் மணிஐயரின் 100வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ‘இலங்கையிலும் தமிழகத்திலும் கதாப்பிரசங்கக் கலை’ மற்றும் ‘அர்த்தமுள்ள சம்பிரதாயங்கள்’ என்ற நூல்கள் இன்று வெளியிடு செய்து வைக்கப்பட்டுள்ளது.