அரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: இரா.சம்பந்தன்

தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு திருப்தி அடையக்கூடிய அளவுக்கு அரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை என்பதே உண்மையேயாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் அண்மையில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

நாடாளுமன்றத்தில் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படவுள்ளது என்று சொல்லப்படுகின்றதே தவிர அது இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை.

அவ்வாறு கொண்டு வரப்படுமானால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய நாம் என்ன முடிவு எடுக்கவேண்டுமென்பதை நாடாளுமன்றக் குழு கூடியே ஒரு கூட்டுத்தீர்மானம் மேற்கொள்வோம்.

இந்த அரசு தொடரவேண்டுமென்பது எமது எதிர்பார்ப்பாகும். எதிர்காலத்தில் என்ன நடைபெறும் என்பதை எம்மால் திட்டவட்டமாக கூறமுடியாது.

அரசியல் தீர்வு முயற்சிகள் தொடரவேண்டும். தேசியப் பிரச்சனை தீர்த்து வைக்கப்பட வேண்டும். தீர்த்து வைக்கப்படாமல் நாட்டிலுள்ள எந்தப் பிரச்சினைக்கும் நல்ல முடிவு காணமுடியாது.

ரணிலின் அரசாக இருக்கலாம், ஜனாதிபதி மைத்திரியின் ஆட்சியாக இருக்கலாம், இல்லை மஹிந்த ஆட்சியாக இருக்கலாம். இதுதான் உண்மை நிலை. இது தீர்க்கப்படாத நிலையில் எந்த அரசும் நிலைத்திருக்க முடியாது.

இந்த அரசின் மீது தமிழ் மக்களுக்கு அவ நம்பிக்கை ஏற்படுவதற்கு பல காரணங்கள் உண்டு. இருந்த போதிலும் ஒரு கட்சியென்ற வகையில் நாம் எதையும் தூக்கி எறிந்துவிடமுடியாது.

தமிழ் மக்கள் தீவிரமாகவும் பக்குவமாகவும் நேர்மையாகவும் செயற்பட்டார்கள் என்ற உயர்ந்த அபிப்பிராயத்தை சர்வதேச சமூகம் உணர வேண்டும். தமிழர்கள் தமக்கு கிடைத்த சந்தர்ப்பத்தையும் வாய்ப்பையும் கெடுத்துவிட்டார்கள் என்ற முடிவுக்கு சர்வதேச சமூகம் வர நாம் இடமளிக்கக்கூடாது.

அரசின் மீது கொண்ட அதிருப்தியே உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பின்னடைவைச் சந்தித்தது. வாழ்க்கைச் செலவு அதிகரித்துச் சென்றமை, முன்னைய கால ஊழல்கள், தற்போதைய ஊழல்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படாமை போன்ற காரணங்களே அவர்களின் பின்னடைவுக்கு காரணம்.

2015ஆம் ஆண்டு ஐ.நா தீர்மானத்தில் கூறப்பட்ட எந்தவொரு கருமமும் நிறைவேற்றப்படவில்லை. சில விடயங்களில் முன்னேற்றம் காணப்படுகிறது.

காணி விடுவிப்பு, காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம், மீள்குடியேற்றம், சிறைக்கைதிகள் விவகாரமென சில முன்னேற்றங்கள் காணப்பட்டபோதும் அதில் முழுமை நிலை அடையப்பெறவில்லை.

இத்தகைய முன்னேற்ற நிலைகள் காணப்படுகிறபோதும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் கடுமையான எதிர்ப் பரப்புரைகள் நிலமைகளை மோசமாக்கி வருகின்றன.

இருந்தாலுங்கூட தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு திருப்தி அடையக்கூடிய அளவுக்கு அரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை என்பதே உண்மையாகும் என தெரிவித்துள்ளார்.