கிளிநொச்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கலந்துரையாடல்!

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி, பூநகரி, பச்சிலைப்பள்ளி பிரதேச சபைகளுக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களுடனான கலந்துரையாடல் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த கலந்துரையாடல் கிளிநொச்சியில் உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையகமான அறிவகத்தில் தற்போது நடைபெற்றுவருகின்றது.

இதில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறீதரன், மாவை சேனாதிராஜா மற்றும் வலிகாமம் வடக்கின் தவிசாளர் சுகிர்தன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது, நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டால் எவ்வாறு செயற்படுவீர்கள் என வினவியபோது, அவ்வாறு ஓர் தீர்மானம் கொண்டு வரப்பட்டால் ஏனைய உறுப்பினர்களுடன் பேசியே முடிவு எட்டப்படும் என தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

காணாமல் போனோர் அலுவலகம் அமைக்கப்பட்டமை, மனித உரிமை பேரவை, தாங்கள் உள்ளிட்டோரின் அழுத்தத்தின் பிரகாரமே அமைக்கப்பட்டது. குறித்த முயற்சி வரவேற்க தக்கது.

இருப்பினும், குறித்த அலுவலகம் எடுக்கும் முயற்சிகள் தொடர்பிலும், முன்னேற்றங்கள் தொடர்பிலும் நாம் அவதானிப்பதாகவும், அவ்வாறு இடம்பெறும் செயற்பாடுகள் மக்கள் ஏற்ககூடிய வகையில் அமைகின்றதா என தாம் பொறுத்திருந்து பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.