கேள்விக்குறியாகும் சூழலில் வட மாகாண அரசியல்? சிவநேசன்!

வடக்கிற்கு வருகின்ற மகாவலி திட்டத்தை நாம் எதிர்க்கவில்லை என்பதுடன், அதன் நோக்கத்தையே எதிர்ப்பதாக வட மாகாண விவசாய அமைச்சர் க.சிவநேசன் தெரிவித்துள்ளார்.

வட மாகாண விவசாய, கமநலசேவைகள் மற்றும் நீர்வழங்கள் அமைச்சின் ஏற்பாட்டில் வவுனியா மாவட்ட சிறந்த விவசாயிகள், பண்ணையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று நடைபெற்றுள்ளது.

இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் கூறுகையில்,

வவுனியா மாவட்டத்தில் பல குளங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இதனால் விவசாயத்திற்கு நீர்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

ஆனால் இந்த நிலைக்கு மக்கள் தான் காரணம் எனக் கூற முடியாது. அரசியல்வாதிகளின் தலையீடு காரணமாகவே குளங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு அழிந்து போயின.

பல நூற்றுக்கணக்கான குளங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு குடியிருப்புக்களாக மாற்றம் பெற்றுள்ளமையால் அதன் கீழான விவசாய நடவடிக்கைகள் பாதிப்படைந்துள்ளன.

மகாவலி திட்டத்துடன் தொடர்புடையதாக படிமுறை நீர்பாசனத் திட்டம் ஒன்றை தற்போது இங்கு கொண்டு வந்துள்ளார்கள்.

எங்களுடைய பிரதேசத்தில் இருக்கின்ற 28 அல்லது 30 குளங்கள் கூட அதனால் பயனடையவுள்ளதாக கூறுகின்றார்கள்.

ஆனால் இந்த முறை ஒரு சிறப்பான முறையாக இருந்தாலும் கூட இங்கு கொண்டு வருகின்ற போது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்கள் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளன.

மகாவலி அபிவிருத்தி திட்டத்தின் மொரக்காகந்த நீரினை இங்கு கொண்டு வருவதாக இருந்தால் சேமமடு குளத்தில் அந்த நீரை சேமித்து இரணைமடுக்குளம் வரை அந்த திட்டத்தை கொண்டு செல்வதாக அவர்களது திட்டங்கள் உள்ளன.

ஆனால் அந்த திட்டங்களை மகாவலி அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் அமுல்படுத்துகின்ற போது அது எங்களுடைய வட மாகாண அரசை அல்லது ஆட்சியை அல்லது எங்களது இருப்பை கேள்விக் குறியாக மாற்றக் கூடிய சூழ்நிலை இருக்கின்றது என தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் சிறந்த விவசாயிகள், பண்ணையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு

வவுனியாவில் சிறந்த விவசாயிகள் மற்றும் பண்ணையாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு வடமாகாண விவசாய அமைச்சின் ஏற்பாட்டில் வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

வடக்கு மாகாண விவசாயமும் கமநலசேவைகளும், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், மீன்பிடி நீர் வழங்கல் மற்றும் சுற்றாடல் அமைச்சர் கந்தையா சிவனேசன் தலைமையில் இந்த நிகழ்வுகள் நடைபெற்றன.

வவுனியாவில் 2017 ஆம் ஆண்டு தெரிவு செய்யப்பட்ட சிறந்த விவசாய போதனாசிரியர் மட்ட வெற்றியாளர்களான சிறந்த விவசாயிகள், சிறந்த வீட்டுத்தோட்ட செய்கையாளர், சிறந்த சேதன விவசாய செய்கையாளர்கள், நவீன விவசாய இயந்திரமயமாக்கலை மேற்கொள்ளும் சிறந்த விவசாயிகள், இளம் விவசாயிகள், பெண் வலுவூட்டலை நிலைப்படுத்துவதற்காக சிறந்த விவசாய பெறுமதி சேர் நடவடிக்கையுடன் வணிகமுறைமையையும் பின் பற்றும் விவசாயப் பெண்கள் ஆகியோருக்கான கொளரவிப்பு நிகழ்வுகள் நடைபெற்றது.

நிகழ்வில் விருந்தினர்களாக வட மாகாணசபை உறுப்பினர்களான ப.சத்தியலிங்கம்,இ.இந்திரராசா, ம.தியாகராஜா, அ.ஜெயதிலக, த.செனவிரெட்ன, வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சோமரத்தின விதான பத்திரன மற்றும் கிளிநொச்சி பிராந்திய விவசாய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையத்தின் மேலதிக பணிப்பாளர் எஸ்.ஜே.அரசகேசரி ஆகியோர் கலந்துகொண்டிருந்ததுடன், வவுனியா மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள், பண்ணையாளர்களும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.