நினைவுச் சின்னங்கள் சமாதானத்தை வலியுறுத்துவதாக அமைய வேண்டும்: எம்.ஏ.சுமந்திரன்

எமது பிரதேசத்தில் பணியாற்றி விடைபெற்றுச் செல்பவர்களுக்கு கொடுக்கப்படும் நினைவுச் சின்னங்கள் சமாதானத்தை வலியுறுத்துவதாக அமைய வேண்டும். வன்முறையை தூண்டும் சின்னங்களாக இருந்து விடக்கூடாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தில் கொன்சியூலர் ஜெனரலாகப் பணியாற்றிய ஆறுமுகம் நடராஜனுக்கு, யாழ். முஸ்லிம் சமூகம் சார்பில் ரில்கோ தனியார் உணவு விடுதியில் மதிப்புறுத்தல் நிகழ்வு நேற்று நடத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:-

யாழ்ப்பாணத்தில் அலுவலகம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இன்று வரை இந்திய அரசு எமது மக்களுக்குத் தேவையான எத்தனையோ தேவைகளையும் அபிவிருத்திகளையும் அரசியல் உதவிகளையும் செய்து வருகின்றது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பெரும்பான்மையாகத் தமிழ் மக்கள் வாழ்கின்றனர். அவர்களுக்கான உரிமைகள் தொடர்பில் இலங்கை – இந்திய ஒப்பந்தத்திலேயே முதன்முதலாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதனால் தான் நாம் இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை அரசியல் தீர்வு விடயத்தில் முக்கிய ஆவணமாக வைத்துள்ளோம்.

இலங்கையில் நாம் இந்தியாவை ஒதுக்கி எந்தக் கருமத்தையும் செய்து விட முடியாது. இதில் கோபிக்க எதுவும் இல்லை. இதுதான் உண்மை.

நாங்கள் பல நாடுகளின் இராஜதந்திரிகள் பலரை சந்தித்து எமது பிரச்சினைகளைக் கூறும் போது அவர்கள் முதலில் கேட்பது இது தொடர்பாக இந்தியா என்ன சொல்லுகின்றது என்ற கேள்வியையே தொடுக்கின்றனர்.

இவ்வாறு இந்தியாவின் ஆதரவுடனேயே நாம் எதனையும் செய்ய முடியும். போரால் பாதிக்கப்பட்ட எமது மக்கள் மீண்டு எழுந்து வாழ இந்தியா பல வழிகளில் உதவிகளைச் செய்து வருகின்றது.

எமக்கு எந்தச் சந்தர்ப்பத்திலும் இந்தியா உறுதுணையாக நிற்கின்றது. நாம் தவறுகள் ஏதாவது செய்திருந்தால் எமது மக்கள் சார்பில் நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கின்றேன்.

எமது மண்ணை விட்டுப் பிரிந்து செல்லும் போது இங்கு கூடியுள்ள முஸ்லிம் சமூகமக்களும் நினைவுச் சின்னம் கொடுப்பீர்கள் என்று நினைக்கின்றேன்.

இவ்வாறான மனிதர்களுக்கு நினைவுச் சின்னத்தை வழங்கும் போது சமாதானத்தை பிரதிபலிக்கும் சின்னங்களை வழங்குங்கள். மாறாக நீங்கள் வழங்கும் நினைவுச் சின்னம் வன்முறையாக இருந்து விடக் கூடாது என்றார்.

கொன்சியூலர் நடராஜன் யாழில் அண்மையில் நடத்திய விருந்துபசார நிகழ்வில், வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் யாழ்ப்பாண மக்கள் சார்பாக வாள் ஒன்றை நினைவுப் பரிசாக வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.