மலர்ந்த தமிழீழத்தில் நடராஜன் கால் பதிக்க வேண்டும்: சீ.வி.கே.சிவஞானம்

தமிழீழம் மலர்வதற்கு இந்திய அரசு, இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என வட மாகாண சபை அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

அத்துடன், மலர்ந்த தமிழீழத்தில் கொன்சியூலர் ஜெனரல் நடராஜன் மீண்டும் கால் பதிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தில் கொன்சியூலர் ஜெனரலாகப் பணியாற்றிய நடராஜனுக்கு, பிரிவு உபசார விழா நேற்று நடத்தப்பட்டுள்ளது.

இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

இந்தியத் துணைத்தூதரக கொன்சியூலர் நடராஜன் யாழ்ப்பாணத்தில் 3 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். மாகாண சபை முறைமை உருவாக பெரும் பங்காற்றியது இந்தியாதான்.

அதிலும் காலம் தாழ்த்தி உருவாக்கப்பட்ட வட மாகாண சபையின் உருவாக்கத்துக்கும் இந்தியாவின் பங்களிப்பு இருந்தது.

நாமும் இந்தியாவும் தாய், பிள்ளைகள் போல உறவாடி வருகின்றோம். ஒரு சில விடயங்களில் எமக்கு ஏமாற்றமான நிகழ்வுகள் நடந்திருந்தாலும் நாம் இன்றுவரை இந்தியாவை நம்பியுள்ளோம்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஊடாக எமக்குரிய தீர்வை பெற்றுத்தர வலியுறுத்தி மூன்று முக்கிய நாடுகளை கோரியுள்ளோம்.

அதில் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளையே வலியுறுத்தியுள்ளதுடன் இவர்கள் இலங்கை அரசுக்கு அழுத்தங்களை பிரயோகித்து எமக்கான சுயாட்சி, சுய உரிமைகளை பெற்றுத்தர வலியுறுத்தி வருகின்றோம் என தெரிவித்துள்ளார்.