எமக்கான நாடு வேண்டும் என்பதற்காக துப்பாக்கியை தூக்கிய போதும் 2009இல் அது கனவாகிப் போனது: கருணாகரம்

எமக்கான ஒரு நாடு வேண்டும் என்பதற்காக புத்தகப்பைகளை தூக்கியெறிந்துவிட்டு துப்பாக்கியை தூக்கிய போதும் 2009ஆம் ஆண்டு அது கனவாகி போனது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு – கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட கோரகல்லிமடு பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

கிழக்கு மாகாண ஆளுநர் அரசாங்கத்தின் பிரதிநிதியாக இல்லாமல் ஒரு அரசியல் கட்சியின் மாகாண அமைப்பாளர் போல் செயற்படுவதாகவே நாங்கள் கருதுகின்றோம்.

கிழக்கு மாகாண ஆளுநரால் நடத்தப்படும் நிகழ்வுகள் அவ்வாறான ஒரு சந்தேகத்தினையே அனைவர் மத்தியிலும் ஏற்படுத்தியுள்ளது.

சில தினங்களுக்கு முன்னர் அம்பாறை, அட்டப்பள்ளத்தில் காலம் காலமாக மயானமாக தமிழ் மக்கள் பாவித்து வந்த காணி சகோதர இன பேராசிரியர் ஒருவரினால் அபகரிக்கும் நிலையேற்பட்டது.

அதற்கு எதிராக போராடிய பிரதேச ஆலய தலைவர் உட்பட 23 பேர் சிறைப்படுத்தப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்.

நீண்ட காலத்திற்கு முன்னர் புதைக்கப்பட்ட சடலங்களின் கல்லறைகளையும் சேர்த்து வேலியடைத்து அந்த காணியை அபரிக்க முயற்சித்துள்ளனர். அந்த காணி அப்பகுதி தமிழ் மக்களினால் 200 வருடத்திற்கு மேலாக மயானமாக பயன்படுத்தப்பட்டுவந்துள்ளது.

ஆனால் அந்த சகோதர இன பேராசிரியர் அந்த காணியை 25 வருடங்களுக்கு முன்னர் கொள்வனவு செய்ததாக கூறியுள்ளார். அவர் காணி வாங்குவதற்கு முன்னர் இறந்தவர்களின் கல்லறைகள் அங்கு உள்ளன. அதனை பார்க்காமலா அந்த காணியை அவர் கொள்வனவுசெய்திருப்பார்?.

இவ்வாறான நிலையில் எங்களுக்குள் ஏற்பட்டுள்ள ஒற்றுமையீனத்தினால் கிழக்கு மாகாணம் முற்றுமுழுதாக பறிபோகும் நிலைமை ஏற்பட்டுவிடக்கூடாது.

1980ஆம் ஆண்டுகாலப்பகுதியில் நாங்கள் இந்த நாட்டில் அடிமைகளாக வாழமுடியாது என்று எமக்கான ஒரு நாடு வேண்டும் என்பதற்காக புத்தகப்பைகளை தூக்கியெறிந்துவிட்டு துப்பாக்கி தூக்கிய போதும் 2009ஆம் ஆண்டு அது கனவாகிப் போனது.

தமிழீழத்திற்காக போராடிய நாங்கள் இணைந்த வடக்கு, கிழக்கில் கூடிய அதிகார பரவலாக்களுடன் கூடிய சமஸ்டியை வேண்டி நிற்கின்றோம் என தெரிவித்துள்ளார்.