தமிழர்கள் கொல்லப்பட்ட போது பால் சோறு கொடுத்து கொண்டாடிய வரலாறும் உள்ளது: வியாளேந்திரன்!

கடந்த கால அரசாங்கத்தினால் அப்பாவி தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட போது அதை வரவேற்று பால் சோறு கொடுத்து, தேசியக் கொடியை பறக்கவிட்டு கொண்டாடிய வரலாறும் உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாளேந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் கூறுகையில்,

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் பொதுபலசேனா, ராவணாபலய போன்ற பௌத்த அமைப்புக்களுக்கு ஆதரவு வழங்கியதால்தான் இந்த நாட்டின் சிறுபான்மை இனமான தமிழ், முஸ்லிம் மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்பி நல்லாட்சிக்கு வாக்களித்தனர்.

இந்த நல்லாட்சி அரசாங்கத்திலும் தொடர்ச்சியாக இனவாத, மதவாத செயற்பாடுகள் நடைபெற்று கொண்டு இருக்கின்றன. 2017இல் ஜின்தோட்டையில், 2018இல் அம்பாறையில் , கண்டி தெனியாய, திகன என நடைபெற்ற இனவாத சம்பவங்கள் சிறுபான்மை மக்கள் தொடர்ந்தும் நசுக்கப்படுகின்ற நிலை தோற்றம் பெற்றுள்ளது.

இனவாதிகள், மதவாதிகள் தங்களுக்குள்ளே மோதிக்கொண்டு பாதிக்கப்படுவது ஒருபக்கம் இருந்தாலும் இவை எவற்றிலும் சம்பந்தப்படாத அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

அந்த வகையில் அண்மையில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களில் முஸ்லிம் இளைஞர் ஒருவரும், சிங்கள இளைஞர் ஒருவரும் கொலை செய்யப்பட்டுள்ளதை நான் வன்மையாக கண்டிக்கின்றேன்.

அதே வேளையில் முஸ்லிம் அரசியல்வாதிகள், இந்த நல்லாட்சி அரசாங்கம் எதிர்வரும் காலங்களில் இனவாத, மதவாத வன்முறைகள் நடைபெறாது என உறுதிமொழியினை அளித்து அதற்குரிய திட்டத்தை எதிர்வரும் நாடாளுமன்ற அமர்விற்குள் முன்வைக்காவிட்டால் நல்லாட்சிக்கு இவர்கள் வழங்கும் ஆதரவினையும், அமைச்சரவையில் இவர்கள் வகிக்கும் அமைச்சுப்பதவிகளையும், மக்களுக்காக தூக்கி எறிவார்களா? என இவர்களிடம் கேள்வி எழுப்புகின்றேன்.

இவ்வாறான வன்முறைகளினால் அதிகமாக பாதிக்கப்பட்ட இனமாக தமிழ் இனம் காணப்படுகின்றது. கடந்த கால அரசினால் அப்பாவித் தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்படும் போது அதை வரவேற்று பால் சோறு கொடுத்து, தேசியக் கொடியை பறக்கவிட்டு சந்தோசமாக கொண்டாடிய வரலாறும் உள்ளது.

ஒரு இனம் அழிக்கப்படும் போது மற்ற இனம் அதைப்பார்த்து மகிழ்ச்சி அடைவது ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாக உள்ளது. தற்போது தமிழ் மக்களும் ஆங்காங்கே மதவாதிகளாலும், இனவாதிகளாலும் பாதிக்கப்படுகின்ற சம்பவங்கள் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றன.

சமீபத்தில் அட்டப்பள்ளம் கிராமத்தில் தமிழர்களின் பூர்வீக மயானக்காணி நசீர் என்பவரால் அத்துமீறி அடைக்கப்பட்டிருந்தது.

இதைத் தமிழ் மக்கள் தடுத்து நிறுத்த முற்பட்ட போது அங்கிருந்த அரச அதிகாரிகளும், பொலிஸரும் அத்துமீறி மயானக்காணியினை சுவீகரிக்க முற்பட்ட நபருக்கு சார்பாக செயற்பட்டு ஜனநாயக முறையில் போராட்டம் நடத்திய தமிழ் மக்களை சமாதானத்திற்கு அழைப்பதாக கூறி 21 தமிழர்கள் கைது செய்து மட்டக்களப்பு சிறைச்சாலையில் சிறைவைக்கப்பட்டனர்.

இது போன்ற செயற்பாடுகள் தற்போது அம்பாறையிலும் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன. இவ்வாறான வன்முறைகளை தூண்டும் இன, மத வாதிகளுக்கு சார்பாக அரசியல் வாதிகளோ, அரச அதிகாரிகளோ, சட்டம் ஒழுங்கை நடைமுறைப்படுத்துகின்ற பொலிஸாரோ செயற்படுவதை நான் வன்மையாக கண்டிக்கின்றேன்.

இவ்வாறான செயற்பாடுகளை இந்த நல்லாட்சி அரசாங்கம் கைகட்டி கொண்டு வேடிக்கை பார்க்கக் கூடாது. திரும்பவும் இவ்வாறான வன்முறைகள் நடைபெறாமல் இருப்பதங்கான திட்டங்களை சரியான முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும்.

இவ்வாறாக நல்லாட்சி அரசாங்கம் செயற்படா விட்டால் கடந்த மகிந்த ராஜபக்ச அரசாங்கம் எவ்வாறு மக்களால் தூக்கி எறியப்பட்டதோ அதே போன்று நல்லாட்சி அரசாங்கமும் மக்களால் நிராகரிக்கப்படும் என்பதை கூறிக்கொள்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.