இனவாத சக்திகளை அரசு இறுக்காதது புரியாத புதிர்: ஈ.சரவணபவன்

அம்பாறை விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியமையே கண்டி வன்முறைகள் பிரமாண்டமாக வெடிக்கும் வாய்ப்பை உருவாக்கியது என்பதை நாம் நம்புகிறோம்.

இனவாத சக்திகளுக்கு எதிராக அரச தலைவர் மைத்திரியும், தலைமை அமைச்சர் ரணிலும் இறுக்கமான நடவடிக்கைகளை எடுக்கத் தயங்குகிறார்கள். இது ஏன் என்பதை எம்மால் புரிந்துகொள்ள முடியவில்லை நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளனர்.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

ஒரு சாரதி சில இளைஞர்களால் தாக்கப்பட்டு, உயிரிழந்த சம்பவமானது தனிப்பட்ட நபர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினையே. அது தண்டனைக்குரிய குற்றவியல் குற்றமாகும். தாக்குதலை நடத்திய சில இளைஞர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறான சம்பவங்களுக்கு இனவாதம் பூசப்பட்டு, தனிப்பட்ட நபர்களுக்கிடையேயான பிரச்சினைகளை இனங்களுக்கு இடையேயான மோதல்களாக மாற்றி வன்முறைக்கு ஒரு பிரதேசத்தையே தள்ளுவது அனுமதிக்கப்படக்கூடியதல்ல. இது நாட்டின் ஒட்டுமொத்த அமைதியையும் குலைக்கும் ஒரு பயங்கரவாத நடவடிக்கை என்றே நாம் கருதுகிறோம்.

கண்டியில் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாகவும் ஒருவரையொருவர் நல்லுறவைப் பேணியும் வாழ்கின்றனர். அங்கு இன மோதல்கள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன என்றால் அதற்குப் பின்னால் இனவாத அரூபக் கரங்கள் வலிமையுடன் செயற்பட்டுள்ளன என்பதை எம்மால் தெளிவாகவே புரிந்துகொள்ளமுடியும்.

இந்தப் பிரச்சினை பற்றியும் இதன் இது உற்பத்தியான உண்மையான மூலம் தொடர்பிலும் இது பெருப்பிக்கப்பட்டு மோசமான வன்முறையாக மாற்றப்பட்டமையின் பின்னாலுள்ள சக்திகள் பற்றியும் நாம் தெளிவான ஒரு புரிதலுக்கு வர வேண்டியவர்களாக உள்ளோம்.

சாதாரணமாக வன்முறைகளில் முன்னின்று செயற்படும் ஏவல் பிசாசுகளை கைது செய்வதும் தண்டனை அளிப்பதும் பிரச்சினைகளுக்குத் தீர்வாக அமையப்போவதில்லை.

பிரச்சினையில் மூலவேர் கண்டுபிடிக்கப்பட்டு அகழ்ந்து தெடுக்கப்பட்டு அழிக்கப்படாவிட்டால், இத்தகைய நிலைமைகள் மீண்டும் மீண்டும் முளைவிடும் என்பதில் சந்தேகத்துக்கு இடமில்லை.

ஆட்சி மாற்றத்தின் பின்னர் நிலமை மாறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. முஸ்லிம் மக்களும், தமிழ் மக்களும் மைத்திரிபால சிறிசேனவும் இன்றைய அரசு ஆட்சிக்கு வரவும் பேராதரவு வழங்கினர்.

சில காலம் இனவாத வன்முறைகள் இடம்பெறாதபோதும், அண்மைக் காலங்களில் அவை முளைவிட ஆரம்பித்துள்ளன.

அம்பாறையில் திட்டமிட்டவகையில் முஸ்லிம் உணவகங்களில் கர்ப்பத் தடை மருந்து உணவுகளில் சேர்க்கப்படுகிறது என்ற பொய் பரப்புரை மூலம் பல கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. பள்ளிவாசலும் சேதமாக்கப்பட்டது. அங்கிருந்த வாகனங்களும் தீக்கிரையாக்கப்பட்டன.

இது தொடர்பாக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்ற மக்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக கைது செய்யப்பட்ட ஒரு சிலரும் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

அதுமட்டுமின்றி இரவு தொடங்கப்பட்ட கலவரங்கள் அதிகாலை ஒருமணி வரையிலும் தொடர்ந்த போதிலும் அவ்விடத்துக்கு பொலிஸார் வரவில்லை.

இப்படியான அலட்சியமான நடவடிக்கைகள் இனவாத சக்திகளுக்கு அச்சமின்றி வன்முறைகளை தொடரும் துணிச்சலை கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இலங்கையின் இன்றைய சிங்கள அரசியலில் இனவாதம் என்பது சில தரப்பினரால் வலிமைமிக்க அரசியல் ஆயுதமாக பயன்படுத்தப்பட்டுகின்றது என்பதை முஸ்லிம் அரசியல் தலைமைகள் புரிந்து கொள்ளவேண்டும்.

தமிழ் பேசும் மக்கள் என்ற முறையிலும் இலங்கையின் சிறுபான்மை இனங்கள் என்ற முறையிலும் தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும் என்பதில் அவர்கள் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்.

இது சிங்கள இனவாத சக்திகள் சிறுபான்மை இனங்களுக்கு எதிராக மேற்கொண்டுவரும் ஒடுக்குமுறை நடவடிக்கைகளிலிருந்து பாதுகாக்க தவிர்க்க முடியாதொரு தேவையாகவுள்ளது.

இன்று சில முஸ்லிம் தலைவர்கள் வடக்கு – கிழக்குக்கு இணைப்புக்கு எதிராக குரல் கொடுத்துவருகின்றனர்.

வடக்கு, கிழக்கு இணைப்பு என்பது முஸ்லிம் மக்களையும் தமிழ் மக்களையும் ஒன்றிணைத்து பலமான சக்தியாக உருவாக்கிவிடும் என்ற காரணத்தால் இனவாத சக்திகள் அதைக் கடுமையாக எதிர்த்தன. வடக்கு – கிழக்கு இணைப்பை எதிர்க்கும் முஸ்லிம் தலைமைகள் சிங்கள இனவாதிகளின் அபிலாசைகளுக்கு இணங்கச் செயற்படுகின்றனர்.

அதை அவர்கள் புரிந்துகொண்டு அந்த மாயையில் இருந்து விடுபடவேண்டும் என்று உரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம். நாம் இனவாத சக்திகளை திருப்திப்படுத்துவதன்மூலம் எமக்கான உரிமைகளை பெறமுடியும் என நினைப்பது எவ்வளவு முட்டாள் தனம் என்பதை அண்மையில் இடம்பெற்ற வன்முறைகள் உணர்த்தி நிற்கின்றன.

அம்பாறை, கண்டி ஆகிய மாவட்டங்களில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாக உண்மைக் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு சட்டத்தின்முன்

நிறுத்தப்படவேண்டுமென்பதையும் அவர்களின் பின்னால் நின்று அவர்களை இயக்கிய இனவாத சக்திகள் மக்கள் முன் அம்பலப்படுத்தப்பட்டு அவர்களின் நடவடிக்கைகள் கட்டுக்குள் கொண்டுவரப்படவேண்டும் என்பதையும் நான் இந்த உயரிய சபையில் வலியுறுத்த விரும்புகிறேன்.

இதேவேளையில் முஸ்லிம்களுக்கு எதிரான அநீதிகளை கண்டித்து தமிழ் மக்களும், தமிழ்மக்களுக்கு எதிரான அநீதிகளைக் கண்டித்து முஸ்லிம் மக்களும் தமிழ் பேசும் மக்கள் என்ற முறையிலும் ஒடுக்கப்படும் சிறுபான்மை இனம் என்ற வகையில் குரல்கொடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.