சபையில் கூச்சல்! இடைநடுவில் பேச்சை நிறுத்திய சிறீதரன் எம்.பி!

சபையில் ஏற்பட்ட கூச்சல், குழப்பநிலையை தொடர்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தனது உரையினை இடைநடுவே நிறுத்திக்கொண்டார்.

நாடாளுமன்ற இன்றைய அமர்வின் போது, கண்டியில் நேற்று ஏற்பட்டிருந்த அசாதாரண நிலை குறித்து விவாதம் நடத்தப்பட்டிருந்தது.

இதன் போது உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன், “நேற்று கண்டியில் ஏற்பட்டிருந்த அசாதாரண நிலை தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை ஞாபகப்படுத்தியிருந்தது.

எனவே, யாரோ ஒரு சிலர் ஏற்படுத்தியிருந்த குழப்பத்திற்காக அந்த இனத்தின் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்படக்கூடாது.

அத்துடன், இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படுவதை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதன்போது சபையில் இருந்தவர்கள் கூச்சலிட்டனர். இதனால் சிறீதரன் எம்.பி தொடர்ந்தும் பேசுவதில் இடையூறுகள் ஏற்பட்டிருந்தன.

இதனையடுத்து, சபைக்கு தலைமை தாங்கிய குழுக்களில் பிரதி தலைவர் செல்வம் அடைக்கலநாதன், அமைதி காக்கும் படியும், தொடர்ந்து இடையூறு ஏற்படுத்தப்பட்டால் சபை ஒத்திவைக்கப்படும் எனவும் கூறியிருந்தார்.

எனினும், கூச்சலும், இடையூறுகளும் தொடர்ந்த நிலையில், தான் உரையாற்றுவதை நிறுத்திக்கொள்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்தார்.