ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்ணான்டோவுடன் நா.உ சிறீநேசன் அவசர கலந்துரையாடல்!

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலை தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்ணான்டோவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறீநேசன் அவசர கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

தொலைபேசியின் ஊடாக அவர் இது குறித்து இன்றைய தினம் ஜனாதிபதியின் செயலாளருடன் கலந்துரையாடியுள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை மற்றும் ஆங்காங்கே இடம்பெற்று வரும் வன்முறைச் சம்பவங்கள் காரணமாக, கிழக்கு மாகாணத்தின் எல்லைப்புற கிராம மக்களின் இயல்பு நிலை பாதிப்படைந்துள்ளது.

இது தொடர்பிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் சிறீநேசன் ஜனாதிபதியின் செயலாளருடன் கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கிழக்கு மாகாணத்தின் எல்லைப்புற கிராமங்களில் உள்ள மக்கள் நட்புறவுடன் வாழும் சூழலில் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் கடமை என ஜனாதிபதியின் செயலாளர் இதன்போது தெரிவித்துள்ளார்.

மேலும், குறித்த பகுதிகளில் பாதுகாப்பினை பலப்படுத்த நாட்டில் நிறைவேற்று அதிகாரமுடையவர் என்ற வகையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கண்ணும் கருத்துமாக செயற்படுகின்றார் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.