பெரும்பான்மை இனத்தவர்கள் மத்தியில் பெரிய மனமாற்றமே தேவையாக இருக்கின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் கூட்டமைப்பின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற விவாதத்திலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
சரியானவற்றைச் செய்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபாலவுக்கோ, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கோ, இந்த அமைச்சரவையில் உள்ளவர்களுக்கோ முதுகெலும்பில்லை. நாட்டில் எண்ணிக்கையில் சிறுபான்மையினரான மக்கள், சுயமரியாதையுடன், பயமில்லாமல் வாழ முடியாது என்றால் நாட்டை ஆள்வதற்கு உங்களுக்குத் தகுதியில்லை.
2015ஆம் ஆண்டு எதனை எதிர்பார்த்து மக்கள் வாக்களித்தார்களோ அதை இந்த அரசு தவிடுபொடியாக்கியிருக்கின்றது. இந்தச் சம்பவத்தை வைத்து மாத்திரம் நான் இவ்வாறு தெரிவிக்கவில்லை. முன்னைய அரசு என்ன செய்ததோ அதனையே இந்த அரசும் செய்கின்றது. பேரினவாதத்துக்கு பாலூட்டி வளர்க்கின்றது.
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பேரினவாதிகள் கூடுதலான வாக்குகளைப் பெற்று விட்டார்கள் என்பதற்காக, இந்த அரசு பேரினவாதிகளைச் சமாதானப்படுத்தும் நடவடிக்கையில் உள்ளூராட்சி சபைத் தேர்தலின் பின்னர் ஈடுபடுகின்றது. மக்கள் இதற்காக இந்த அரசுக்கு வாக்களிக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.