வன்முறைகள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு சம்பந்தன் கோரிக்கை!

அம்பாறை, திகன ஆகிய பகுதிகளில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டபோது சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட வேண்டியவர்கள் கடமை தவறியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

சட்டம், ஒழுங்கு ஏன் அமுல்படுத்தப்படவில்லையென்பது தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இனவாதச் சம்பவங்களுக்கு எதிராக ஜே.வி.பின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க எம்.பியால் நாடாளுமன்றில் கொண்டுவரப்பட்டசபை ஒத்திவைப்புவேளை பிரேரணையை வழிமொழிந்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதன்போது, தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

சிறுபான்மையின மக்களுக்கு எதிரான வன்முறைகள் மீண்டும் தலைதூக்கிவிட்டன என்ற அச்சம் உருவாகியுள்ளது. அம்பாறை, திகன ஆகிய பகுதிகளில் நடைபெற்ற சம்பவங்கள் இதை உறுதிப்படுத்தும் வகையிலுள்ளன.

அம்பாறையில் உணவுகளில் மருந்து கலந்திருப்பதாககூறி குழப்பம் விளைவிக்கப்பட்டுள்ளது.

இதை அடிப்படையாகக்கொண்டு வர்த்தக நிலையங்கள் மீதும், பள்ளிவாசல்மீதும் தாக்குதல் நடதப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்தியவர்கள் பேருந்தில் வந்தனர் என கூறப்படுகின்றது.

மேற்படி சம்பவம் தொடர்பில் சந்தேகம் நிலவுகின்றது. மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய தரப்பும் உரிய வகையில் செயற்படவில்லையென்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. சட்டம், ஒழுங்கு ஏன் நிலைநாட்டப்படவில்லை எனக் கேட்க விரும்புகின்றேன்.

அத்துடன், விபத்தொன்றை அடிப்படையாகக்கொண்டு கண்டியிலும் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன. வர்த்தக நிலையங்களும், வீடுகளும் உடைக்கப்பட்டுள்ளன.

மேற்படி சம்பவத்தின்போதும் சட்டம், ஒழுங்கு உரிய வகையில் செயற்படவில்லை. இது தொடர்பில் ஆராயப்படவேண்டும்.

இனவாதச் செயற்பாடுகளையும், இனவாதம் தூண்டப்படுவதையும் ஒருபோதும் ஏற்கமுடியாது. அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இல்லையேல், சட்டமும், நீதியும் ஒன்றும்செய்யாது என்ற தகவல், குற்றச்செயல்களில் ஈடுபடும் தரப்புக்குச் சென்றுவிடும். எனவே, பாராபட்சமின்றி நடவடிக்கைகள் அவசியம்.

இதேவேளை, அனைவருக்கும் சமத்துவம் கிடைக்க வேண்டும். மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும். ஆனால், சிலர் தாங்கள் தான் உயர்ந்தவர்கள் என நினைத்துக்கொண்டு ஏனையவர்களை அடக்கியாளப்பார்க்கின்றனர்.

ஆகவே, மக்களைப் பாதுகாப்பதில் அரச கட்டமைப்பில் மாற்றங்கள் ஏற்பட வேண்டும். அடிப்படைகோட்பாடுகள் பற்றி சிந்திக்கப்படவேண்டும் எனவும் இரா. சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.