கண்டி வன்முறை யார் காரணம்? – எதிர்க்கட்சித் தலைவர்!

சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாக்கும் தரப்பினரே கண்டி திகன சம்பவம் வன்முறையாகவும் கலவரமாகவும் மாற பிரதான காரணம் எனவும் அவர்களின் பொறுப்பற்ற செயற்பாடுகளும் இதற்கு காரணம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

சட்டம், ஒழுங்கை பாதுகாக்கும் பொறுப்பை கொண்டு இந்த தரப்பினருக்கு எதிராக அரசாங்கம் உரிய விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கண்டி, தெல்தெனிய சம்பவம் தொடர்பாக கருத்து வெளியிடும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இதனை கூறியுள்ளார்.

சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் மீண்டும் தலைதூக்கியுள்ளதை காண முடிகிறது. அம்பாறை மற்றும் திகன பிரதேசங்களில் நடந்த சம்பவங்கள் இதனை உறுதிப்படுத்தியுள்ளன.

அம்பாறை உணவகம் ஒன்றில் கருத்தடை மருந்து இருந்ததாக முதலில் வன்முறையை ஏற்படுத்தினர். இதனை காரணமாகக் கொண்டு அம்பாறை முஸ்லிம் பள்ளிவாசல்கள், கடைகள் மீது தாக்குதல் நடத்தினர்.

பேருந்துகளில் வேறு இடங்களில் இருந்து வந்தவர்களே இந்த தாக்குதல்களை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய தரப்பினர் உரிய முறையில் செயற்படவில்லை என்று குற்றம் சுமத்தப்படுகிறது.

சம்பவங்களின் போது சட்டம், ஒழுங்கு ஏன் செயற்படுத்தப்படவில்லை.அத்துடன் விபத்து ஒன்றை அடிப்படையாக கொண்டு கண்டியில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக வன்முறை நடந்தது. வர்த்தக நிலையங்கள் வீடுகள் சேதப்படுத்தப்பட்டன.

இந்த சம்பவங்களின் போது சட்டம், ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய தரப்பினர் பொறுப்பின்றி செயற்பட்டுள்ளனர். இது குறித்து விசாரணை நடத்த வேண்டும்.

இனவாத செயல்கள் மற்றும் இனங்களுக்கு இடையில் அமைதியின்மையை ஏற்படுத்தும் செயல்களை எப்போதும் அனுமதிக்க முடியாது.

இப்படியான செயல்களை முற்றாக தடுக்க அரசாங்கம் தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.நாட்டில் உள்ள அனைவருக்கும் பாதுகாப்பு இருக்க வேண்டும்.

இனங்களுக்கு இடையில் ஐக்கியம் இருக்க வேண்டும். எனினும் சிலர் தாம் உயர்ந்தவர்கள் எனக் கூறி மற்றவர்களை தரம் தாழ்த்தி வருகின்றனர்.

இதனால், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.