அதிகாரம் கிடைக்கும் வரை எதுவும் கடினம்: சிறிநேசன்!

தற்காலத்தில் கல்வி என்பது பெரும் போட்டித் தன்மையாகவே அமைந்துள்ளது. எனினும் யுத்தகாலத்தில் பல இன்னல்களையும் சகித்துக் கொண்டு, கல்வியில் சிறந்து விளங்கிய மாணவர்கள் தற்போது கற்று விட்டு பட்டங்களையும் கையில் வைத்துக் கொண்டு உரிய தொழில் வாய்ப்புக்களின்றி வீதி ஓரங்களில் நின்று தொழிலுரிமைக்காகப் போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

வேலையில்லாப் பட்டதாரிகள், கிழக்கில் தமது தொழில் உரிமைப் போராட்டங்களை நடாத்தியபோதும் சிலருக்கு மாத்திரம் அரச தொழில் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் வேலையில்லாப் பட்டதாரிகளின் தொழில் பற்றியும், அண்மையில் அவர்களில் சிலருக்கு வழங்கப்பட்ட ஆசிரியர் நியமனங்கள் தொடர்பிலும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவருமான ஞானமுத்து சிறிநேன் ஞாயிற்றுக் கிழமை (11) மாலை ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில்…

கேள்வி :- அண்மையில் மட்டக்களப்பில் நடைபெற்ற நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் கலந்து கொண்டு 313 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்களை வழங்கி வைத்தார். இதில் தங்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லையா?

பதில் : எமக்கு அழைப்பு விடுத்திருந்தர்கள்.

கேள்வி : ஆனால் நீங்கள் அந்த நிகழ்வில் கலந்து கொள்ள வில்லையே?

பதில் : அன்று வழங்கப்பட்ட நியமனங்கள் தொடர்பில் அதிருப்தியை வேலையற்ற பட்டதாரிகள் எமக்குத் தெரிவித்திருந்தார்கள். அவர்களின் ஆதங்கங்கள் தொடர்பில் கிழக்கு மாகாண பொதுச் சேவை அணைக்குழுவின் செயலாளர் முத்துப்பண்டாவிடம் எடுத்துரைத்தேன்.

இந்நிலையில் அந்நிகழ்வுக்கு நான் போகக்கூடிய அளவிற்கு அந்த நிலவரம் இருக்கவில்லை. இவற்றினை விட எனக்கு அன்றையத்தினம், காஞ்சிரங்குடா, உப்புக்குளம், பனையறுப்பான், போன்ற இடங்களில் 3 கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டியிருந்தது அதற்காகச் சென்றுவிட்டேன்.

கேள்வி : அன்றயத்தினம் வழங்கப்பட்ட நியமனத்தில் 200 இற்கு மேற்பட்ட சிங்கள மொழி மூலமானவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள போதிலும், தமிழ் மொழி மூலமான பட்டதாரிகள் குறைவாகவே இருந்ததற்கு என்ன காரணம்?

பதில் : இதனை நான் கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளரிடம் கேட்டேன். கிழக்கிலுள்ள ஆசிரியர் வெற்றிடங்களைப் பார்த்தே இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளன, தமிழ் மொழி மூல பட்டதாரிகளுக்குரிய வெற்றிடம் குறைவாகத்தான் காணப்பட்டுள்ளது.

இந்நிலையில் கணிதம், ஆங்கிலம், தகவல் தொழில் நுட்பம், உடற்கல்வி, சித்திரம், உள்ளிட்ட பல பாடங்களுக்கு தமிழ் மொழிமூல வெற்றிடங்கள் உள்ளன. ஆனால் மேற்குறிப்பிட்ட பாடங்களுக்குரிய வேலையற்ற பட்டதாரிகள் இல்லை.

இந்நிலையில் இதற்கு முன்னர் வழங்கப்பட்ட ஆசிரியர் நியமனத்தில் சிங்கள மொழி மூல பட்டதாரிகள் உள்வாங்கப்பட்டது குறைவு. இதன் காரணமாகத்தான் இந்நியமனம் இவ்வாறு வழங்கப்பட்டது என எனக்கு தெரிவிக்கப்பட்டது.

கேள்வி : குறித்த நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி 6 மாதத்திற்குள் வேலையற்ற பட்டதாரிகள் அனைவருக்கும் தொழில் வழங்கப்படும் என உறுதியளித்துவிட்டுச் சென்றுள்ளாரே இதுபற்றி என்ன கருதுகின்றீர்கள்?

பதில் : இவ்வாறுதான் கடந்த வருடமும் தெரிவிக்கப்பட்டது. நிகழ்வுகளில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போது வாக்குறுதிகள் வழங்குவது வழமை.

ஆனால் அது நிறைவேறினால் சந்தோசம். அத்தோடு கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவையும் கலைக்குமாறும் தெரிவித்து விட்டுச் சென்றுள்ளார். எதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

கேள்வி : வழங்கப்பட்ட ஆசிரியர் நியமனங்கள் தொடர்பில்?

பதில் : எனக்குக் கிடைத்த தகவல்களின் படி கணக்கியல் பட்டதாரியாக இருப்பவருக்கு தமிழ் இலக்கியம் கற்பிப்பதற்காக நிமிக்கப்பட்டுள்ளார். இவ்விடையம் தொடர்பிலும் நான் பொதுச் சேவை ஆணைக்குழுவிற்கு எடுத்துரைத்துள்ளேன்.

கேள்வி : போட்டிப் பரீட்சையில் சித்தி பெறாத வர்களுக்கும் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதா?

பதில் : குறித்த பாடங்களுக்கு ஆசிரிய வெற்றிடங்கள் காணப்பட்டால் அவற்றுக்குரிய பட்டதாரிகள் இருப்பார்களேயானால் அவர்கள் போட்டிப்பரீட்சையில் குறைவான புள்ளிகளைப் பெற்று சித்தி பெறாமலிருந்தாலும் அவர்களுக்கு நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளது.

உதாரணமாக உடற்கல்வி பாடத்திற்கு வெற்றிடமிருந்து உடற் கல்வியில் பட்டம் பெற்ற ஒருவர் போட்டிப்பரீட்சையில் குறைவான புள்ளிகளைப் பெற்று சித்தி பெறாமலிருந்தாலும் அவருக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது. எனவே பாடங்களுக்குரிய வெற்றிடங்களைப் பார்த்தே நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக அறிகின்றேன்.

கேள்வி : கடந்த காலங்களில் வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேறு தொழில்களுக்கு நியமனங்கள் வழங்கப்பட்ட போல் ஆசிரிய வெற்றிடங்கள் நிரப்பப்பட்டால் ஏனைய தொழில்களுக்கும் பட்டதாரிகளை உள்வாங்கலாம் தானே?

பதில் : 1800 இற்கு மேற்பட்ட ஏனைய தொழில் வாய்ப்புக்களை வழங்கும் செயற்பாடு இருப்பதாக கிழக்கு மாகாணசபைக்கு உள்ளது என உதவிச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

கேள்வி : வருடாந்தம் ஒரு தொகை பட்டதாரிகள் வெளிவந்து கொண்டிருக்கின்றார்கள். இவர்களைத் தேக்கி வைத்துக் கொண்டிருந்தால் தற்போது தொழில் வழங்குவதற்கு கஷ்டப்படுவதுபோல் தொடர்ந்தும் இதே நிலமை தானே காணப்படும் உடனுக்குடன் தொழில் வாய்ப்புக்களை வழங்குவதில் என்ன பிரச்சினைகள் உள்ளன?

பதில் : கிழக்கில் 24 தொழிற்சாலைகள்தான் உள்ளன. அதிலும் அம்பாறையில்தான் உள்ளன. மட்டக்களப்பிலும் சில தொழிற்சாலைகள் இருந்தால் சாதாரணம், உயர்தரம், மற்றும், பட்டம் முடித்தவர்களுக்கும், அதனூடாக தொழில்களை வழங்கலாம். அரச தொழில் வாய்ப்புக்கள் என்பது மட்டுப்படுத்தப்பட்டது. ஆனால் மட்டக்களப்பிலுள்ள ஒருசில தொழிற்சாலைகள் மூடப்பட்டுக்கிடக்கின்றன.

கேள்வி : பட்டதாரிகளை தனியார் துறைகளில் உள்வாங்குவது தொடர்பில் என்ன நினைக்கின்றீர்கள்?

பதில் : தனியார் துறைகள் எனும் போது பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்கக்கூடிய துறைகள் மட்டக்களப்பவில் ஏதும் இல்லை. கொழும்பு போன்ற இடங்களுக்குத்தான் செல்ல வேண்டும்.

அவ்வாறுதான் செல்ல வேண்டியிருந்தாலும், தமிழ், அரசியல், சமூகவியல், போன்ற பாடங்களை வைத்துக் கொண்டு செல்ல முடியாது, கணிணி, ஆங்கிலம், உள்ளிட்ட பல துறைகளில் பட்டங்கள் பெற்றுள்ளவர்களுக்கு தனியார் துறையினரும், வரவேற்கத்தக்க வேதனங்களை வழங்கி உள்ளீர்ப்புச் செய்வார்கள்.

எது எவ்வாறு அமைந்தாலும் எமக்கொன்றொரு பகுதி, பிரதேசம், உரிமை, அதிகாரம், கிடைக்கும் வரைக்கும் எதையும் நாம் நினைத்தபடி செய்வதென்பது கடினம்தான் என அவர் தெரிவித்தார்.