ஆட்சியமைப்பது தொடர்பில் சுயேட்சைக்குழு அணியுடன் கூட்டமைப்பு சந்திப்பு

காரைதீவு பிரதேசசபையில் ஆட்சியமைப்பது தொடர்பில் முதற்கட்டமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் சுயேட்சைக் குழு அணியிருக்கும் இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

த.தே.கூட்டமைப்பு சார்பில் இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம் மற்றும் காரைதீவு மகாசபையின் பிரதிநிதிகளும் சுயேட்சைக்குழுத்தலைவரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

இச்சந்திப்பு மட்டக்களப்பிலுள்ள இலங்கை தமிழரசு கட்சி காரியாலயத்தில் நேற்று நடைபெற்றது.

காரைதீவில் நிலையான ஆட்சியமைப்பது சம்பந்தமாக இருதரப்பினரும் ஆக்கபூர்வமாக கருத்துக்களைத் தெரிவித்ததுடன், மற்றுமொரு சந்திப்பிற்கும் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

காரைதீவு பிரதேசபையில் 11 உறுப்பினர்கள் ஒரு தொங்கு உறுப்பினருடன் மொத்தமாக 12 உறுப்பினர்கள் இருக்கின்றனர்.

இங்கு ஆட்சியமைப்பதற்கு குறைந்தபட்சம் 7 உறுப்பினர்கள் தேவை. நடந்து முடிந்த தேர்தலில் 4 உறுப்பினர்களை த.தே.கூட்டமைப்பு பெற்றிருந்தது.

தலா 2 உறுப்பினர்களை சுயேட்சைக்குழு-1 அணியும், ஸ்ரீலங்கா சு.கட்சியும், ஸ்ரீலங்கா மு.காவும் பெற்றிருந்தது. சுயேட்சை அணி-2 ஒரு உறுப்பினரையும் அ.இ.ம.காங்கிரஸ் ஒரு உறுப்பினரையும் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.