ஆண் பெண் உரிமை பற்றி சி.வி.விக்னேஸ்வரனின் கருத்து!

ஆணைப் போல் பெண்களுக்கும் சம உரிமை என்பது அவர்களது இயல்பிற்கு எதிராக அமையக் கூடாது என வட. மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ். நல்லூர் சங்கிலியன் பூங்காவில் சமூக செயற்பாட்டு மையத்தின் ஆதரவில் இன்று காலை இடம்பெற்ற சர்வதேச மகளிர் தினத்தில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், “ஆணுக்கும் பெண்ணுக்கும் சம உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. பெண் எனப்பட்டவள் ஆண்களின் அடிமைத்தளையில் இருந்து முற்றாக விடுபட்டுள்ளாள் என்று கூறமுடியாது.

பெண்களுக்குச் சம உரிமைகள் கொடுக்கப்பட வேண்டும். ஆண்கள் எந்தக் காலத்திலும் பெண்களுக்கு சமமாக முடியாது. யதார்த்த நிலைக்கு எதிர்த்தாக்கத்தை உண்டுபண்ணுவதாக பெண்மை அமையக் கூடாது. அன்பு, பண்பு, அமைதி, பொறுமை என்வற்றிற்கு அமைய சம உரிமைகளுடன் அவர்களை வாழ வைப்பதே சிறப்பாகும்.

அதே நேரம் பெண் ஒடுக்குமுறை ஆண் மக்கள் மத்தியிலே இன்றும் இருந்து வருகின்றது. வேட்டைச் சமூகம் வேளாண்மைச் சமூகமாக மாற்றம் பெற்ற போது அங்கு பொது உடைமைச் சமுதாயக் கொள்கை நீங்கி தனியுடைமைச் சமுதாயக் கொள்கைகள் தலைதூக்கத் தொடங்கின.

ஒருவனுக்கு ஒருத்தி என்ற தனியுடைமைக் கொள்கையும் வலியுறுத்தப்பட்ட போது பெண்ணின் உரிமைகள் ஆணினால் பறித்துக் கொள்ளப்பட்டதை அவதானிக்கின்றோம்.

அனைவருக்குமாக ஒருவன் சொத்து சேகரிக்கும் தன்மை அல்லது அனைவரும் சேர்ந்து ஒருவனுக்காக சொத்துச் சேகரிப்பது என்ற சேகரிப்பு முறைமை சொத்தை முன்நிறுத்தி அதனுள்ளே பெண்களையும் அடக்கிவிட்டார்கள்.

இவ்வாறு பெண்களை நுகர் பொருளாக மாற்ற முற்பட்ட மனிதன், பெண்ணைத் தனது உடமைப் பொருளாக்கி அவளின் தனித்துவத்தை மழுங்கடித்துவிட்டான். அந்தத் தனித்துவத்தை மீண்டும் நிலைநிறுத்துவதே பெண்ணுரிமை வழங்கலின் முக்கிய குறிக்கோள்.

இன்றைய நிலையில் பெண்கள் மீதான ஒடுக்குமுறை ஆண் பெண் இருவரும் சம உரித்துடையவர்கள் என்ற ஒரு சமத்துவக் கருத்தை வெளிப்படுத்த இடமளித்துள்ளது” எனத் தெரிவித்தார்.