இலங்கை அரசின் பேச்சில் நம்பிக்கை இழந்த சர்வதேச சமூகம்: சிறீநேசன்!

இலங்கை அரசில் இன்றைய நிலையில் இழுத்தடிப்புகளும், கால தாமதங்களும் இடம்பெறுகின்றமையால் அரசின் பேச்சில் நம்பிக்கை இழந்த நிலையில் சர்வதேச சமூகம் காணப்படுகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறீநேசன் தெரிவித்தார்.

ஜெனீவாத் தீர்மானம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில்,

கடந்த ஆண்டு ஜெனீவாத் தீர்மானங்களின் பிரகாரம் பொறுப்புக் கூறுதல் மற்றும் அதனுடன் தொடர்பான விடயங்களோடு தொடர்புபட்ட ஏனைய கருமங்களைக் செய்வதற்குரிய கால அவகாசம் போதியளவு கொடுக்கப்பட்டிருந்தது.

ஆனால் தற்போது மனித உரிமைப் பேரவையின் செயலாளர் அல் ஹுசைன் அவர்கள் ஒரு கருத்தினை வெளியிட்டிருக்கின்றார். அதாவது கொடுக்கப்பட்ட கால அவகாசத்தினை அரசு சரியான முறையில் பயன்படுத்தவில்லை அல்லது போதியளவு முன்னேற்றம் கண்டிருக்கவில்லை என்ற கருத்தைச் சொல்லியிருக்கின்றார்.

அதனடிப்படையில் பார்க்கின்ற போது அவர் சொல்லியிருக்கின்ற விடயம் மிக முக்கியமானதாக அமைகின்றது.

அதாவது இனிமேல் சர்வதேச சட்டத்தின் பிரமானங்களுக்கு அமைவாக மனித உரிமைப் பேரவை நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது பொறுப்புக் கூறுகின்ற அந்தப் பொறிமுறையின் போது தனது செயற்பாட்டினை சர்வதேச சட்டத்திற்கு அமைவாகக் கொண்டு செல்ல வேண்டும் என்ற கருத்தைச் சொல்லியிருக்கின்றார்.

ஆரம்ப காலத்தில் இந்த உள்நாட்டுப் பொறிமுறைகள் மூலமாக இந்த விடயங்களைக் கையாளலாம் என்று சொல்லிக் கொண்டிருந்த இந்த அரசு இன்றைய நிலையில் இழுத்தடிப்புகளும், கால தாமதங்களும் இடம்பெறுகின்றமையால் அரசின் பேச்சில் நம்பிக்கை இழந்த நிலையில் சர்வதேச சமூகம் காணப்படுகின்றது.

இந்த அடிப்படையில் இனி வருகின்ற காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள், யுத்த குற்றங்கள் தொடர்பான விடயங்களுக்கு நிச்சயமாக சர்வதேச சட்டத்தினைப் பாய்ச்ச வேண்டும் என்ற கருத்தினை மனித உரிமைச் செயலாளர் முன்மொழிந்திருக்கின்றார்.

எனவே சர்வதேசத்தை ஏமாற்றிவிடலாம், சர்வதேசத்திடமிருந்து தப்பித்துவிடலாம் அல்லது காலத்தை இழுத்தடிப்பதன் மூலமாக தங்களுடைய சாகசங்களை நிகழ்த்திவிடலாம் என்று இந்த அரசு ஒரு வகையில் தப்புக் கணக்குப் போட்டால் இனி வருகின்ற காலத்தில் இந்த சர்வதேச சட்டத்தின் இறுக்கத்திற்குள்ளாக வேண்டிய ஒரு நிலைமையும் இலங்கை அரசுக்கு இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.