முதியோர்கள் பராமரிக்கப்பட வேண்டும்: சீ.வி விக்னேஸ்வரன்

முதியோர்கள் பராமரிக்கப்பட வேண்டும், அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கக் கூடிய வகையில் அவர்களுக்கான வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும் என்ற நிலையில் முதியோர் அமைப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளன என வட மாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி, சிவநகர்ப்பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட மூத்தோர் சங்கக் கட்டடத்தினை திறந்து வைக்கும் நிகழ்வும், மூத்தோர் கௌரவிப்பு விழாவும் இன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

அனைத்து முதியவர்களும் அவரவர்களின் பிள்ளைகளுடன், உறவினர்களுடன் அல்லது தனியாகவோ வீடுகளில் வசித்து வந்தவர்கள் தான்.

எனினும் இவர்களின் முதுமைக் காலத்தைத் தனியாக இருந்து கழிப்பது சிரமத்தைத் தந்துள்ளதால் தான் இங்கு வந்து சேர்ந்துள்ளார்கள் என்று அறிகின்றேன்.

தொடர்ச்சியாக 50 – 60 ஆண்டுகள் வெளியில் திரிந்து பலவிதமான கடமைகளை ஆற்றிவிட்டு தற்போது வீட்டின் ஒரு மூலையில் முடங்கியிருந்து பேச்சுத் துணை எதுவுமின்றி முகட்டையே அண்ணாந்து பார்த்தவாறு நாள் முழுவதும் அமர்ந்திருப்பது என்பது அவர்களுக்கு இயலாத காரியம்.

பிள்ளைகளுக்கும், வளர்ந்தவர்களுக்கும் முதியோர்களுடன் அமர்ந்திருந்து அளவளாவுவதற்கோ அல்லது அவர்களின் கதைகளைக் கேட்பதற்கோ நேரமில்லை.

இந்த அவசர உலகில் பிள்ளைகள் விரும்பினாலும் அவர்களால் ஓய்வாக அமர்ந்திருக்க முடிவதில்லை. இந் நிலையில் முதியவர்களின் கேள்விகளும் குறிப்புக்களும் அவர்களை இயல்பாகவே சினமடைய வைக்கின்றன.

முதியவர்களுக்கும் பிள்ளைகளின் ஓய்வொழிச்சல் அற்ற ஓட்டங்களும் அவர்கள் சினமடைகின்ற தன்மையும் மிகுந்த கவலையை ஏற்படுத்துகின்றன.

இந்த நிலையில் இவ்வாறான நிலையங்கள் உருவாக்கப்பட்டதின் பின் முதியவர்கள் தமது இல்லங்களில் காலைக் கடன்களை முடித்து உணவு உண்ட பின்னர் இவ்வாறான நிலையங்களுக்கு வந்துவிடுவார்கள்.

குறித்த நிலையத்தில் ஏனைய முதியவர்களுடன் தங்கியிருந்து உரையாடுவார்கள். சிறிய தூரங்களுக்கான சுற்றுலாப் பயணங்களை மேற்கொள்வார்கள்.

ஆலய தரிசனப் பயணங்களை மேற்கொள்வார்கள். பூந்தோட்டங்களை உருவாக்கி அவற்றைப் பராமரிப்பார்கள். கடித உறை தயாரித்தல் போன்ற சிறு சிறு வேலைகளில் தம்மை ஈடுபடுத்திக் கொள்வார்கள்.

மன அமைதியுடனும் மகிழ்ச்சியுடனும் நீங்கள் பொழுதைக் கழிப்பதற்கு இவை ஏற்ற நிலையங்களாக மிளிர்கின்றன.உங்கள் மகிழ்வு எம்மையும் மகிழ்வில் ஆழ்த்துகின்றது.

கிளிநொச்சியில் அமைந்துள்ள இந்த நிலையத்தில் முதியவர்களின் சிறு சிறு வைத்தியச் செலவுகள் மற்றும் கண் சத்திரசிகிச்சைக்கான கண் வில்லை செலவு ஆகியவற்றை முதியோர் சங்க நிதியினூடாக வழங்கப்படுவதாக அறிந்து மகிழ்ச்சியுற்றேன்.

இவை பொது மக்களின் நன்கொடையில் பெறப்பட்டதாக அறிந்தேன். இந்தச் சங்கத்தில் அங்கத்துவம் வகிக்கின்ற முதியோர்கள் கடந்த வருடம் நாகதம்பிரான் கோவில், மடு மாதா ஆலயம், திருக்கேதீஸ்வரம் ஆலயம் ஆகியவற்றிற்கு பயணங்களை மேற்கொண்டதாக தெரிவித்தனர்.

ஒவ்வொரு மாதமும் 03 ஆம் திகதி இங்குள்ள முதியோர்களின் மாதாந்தக் கூட்டம் சிறப்பாக நடைபெறுவதாகவும் அதில் மேற்கொள்ளப்படுகின்ற பல சிறந்த தீர்மானங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் அறிந்து மகிழ்வுற்றேன்.

முன்னைய காலங்களில் கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறைமை எம்மிடையே காணப்பட்டது. தாத்தா, பாட்டி, பிள்ளைகள், மருமக்கள், பேரன், பேத்திகள் என அனைவரும் ஒன்றாக ஒரே வீட்டில் அமர்ந்திருப்பார்கள். ஏன் அவர்களின் பொருட் தேடல்கள் கூட அந்த வீட்டில் வசிக்கும் வயதான தாத்தாவிடமோ அல்லது பாட்டியிடமோ கையளிக்கப்படுவன.

அவர்கள் அப் பணங்கள் எல்லாவற்றையும் சேர்த்து வைத்து பிள்ளைகளின் தேவைக்கேற்ப அவ்வப்போது செலவிற்காகக் கையளிப்பர்.

அந்த வீட்டில் எந்தவொரு தீர்மானம் மேற்கொள்வதாக இருப்பினும் இறுதி முடிவு தாத்தாவினுடையதாகவே இருக்கும்.

இன்று நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறை தற்போது அருகிவிட்டது. அதில் எம்முல் பலருக்கு இஷ்டமும் இல்லை.

மணம் முடித்த மகனொருவன் தான் சிறு வயதாக இருக்கும் போது தனக்கு உணவளித்து சீராட்டிப் பராமரித்த தன் தாய்க்குப் பணம் கொடுக்க விரும்புகின்றான்.

ஆனால் மருமகளுக்கோ அதில் இஷ்டமில்லை. தனது கல்வி நடவடிக்கைகளுக்குப் பணத்தை அள்ளிக் கொடுத்த தந்தையாருக்கு உதவத்துடிக்கின்றாள் திருமணமான மகள்.

அதற்குப் பல இடங்களில் இருந்துந் தடைகள். இவ்வாறாக கட்டுக்கோப்புடன் வாழ்ந்து வந்த எமது சமூகக் கட்டமைப்புக்கள் துண்டு துண்டாக உடைக்கப்பட்டு தனித்தனிக் கோணங்களில் இழுத்துச் செல்லப்பட்டுவிட்டன.

தந்தையின் பேச்சைக்கூட பிள்ளைகள் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றார்கள். இந்த நிலையில் வயது போனவர்களின் நிலைமை பற்றி எடுத்துக் கூறவேண்டியதில்லை.

அம்மாவின் கைவண்ணத்தில் உருவான தேனொழுகும் பாலப்பமும் சுவையான குழல் பிட்டும் அம்மாச்சி கடையில் தான் காணக்கூடியதாக உள்ளன.

தனித்து வாழவே இன்று பலர் விரும்புகின்றார்கள். வீட்டில் சமைக்காது வீதியில் வாங்கிச் சாப்பிடவே எம்மவர் பலர் விரும்புகின்றார்கள்.

எனவே இன்றைய குழந்தைகள் எமது மரபுவழி உணவுகளை உண்ண மறுக்கின்றார்கள். பதிலாக பீட்சா (KFC), உணவுகள், பர்கர் (Burgar) போன்ற நவீன உணவுகளில் நாட்டம் கொண்டுள்ளார்கள்.

பார்ப்பதற்கு அழகாகவும் கவர்ச்சியான உணவுத் தோற்றத்தை ஏற்படுத்துவதாகவும் செய்யப்படும் நவீன உணவுகள் ஒன்றுடன் ஒன்று ஒட்டாத நிலையைப் பேணுவதற்கு நூற்றுக்கணக்கான இரசாயனப் பதார்த்தங்களைப் பாவிக்கின்றன.

எம்மை அறியாமலே புதிய உணவுகளினூடாக உடலுக்குள் இவை அனுப்பப்படுகின்றன. அதன் விளைவு நீரிழிவு நோய், குருதி அழுத்தம், புற்றுநோய் என பல்வேறு வகைப்பட்ட நோய்த் தொற்றுக்களுக்கு இள வயதிலேயே எம் இளைய சமுதாயம் ஆளாக வேண்டியுள்ளது.

முன்பு சிறிய வருமானத்துடன் சிறப்பான வாழ்க்கை முறைகளை அமைத்துக் கொண்ட எமது முதியவர்கள் பிள்ளைகளின் அனாவசிய செலவுகள், படாடோபங்கள், வீட்டில் எந்த வேலையுஞ் செய்யாது இலத்திரனியல் உபகரணங்களுடன் பொழுதைப் போக்குந் தன்மை கண்டு மனம் வெதும்புகின்றார்கள். விளைவு வீட்டில் அனைவரின் கண்டிப்புக்கும் முதியவர்கள் உள்ளாக்கப்படுகின்றார்கள்.

இதனைத் தலைமுறை இடைவெளி என்று கூறுவார்கள்.Generation gap என்று ஆங்கிலத்தில் குறிப்பிடுவார்கள்.

இதன் பொருட்டுத் தான் இவ்வாறான முதியோர் அமைப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

அத்துடன், பகற்பொழுது முழுவதையும் இவ்வாறான நிலையங்களில் கழிப்பதன் மூலம் முதியவர்களும் மகிழ்ச்சியடைகின்றார்கள். வீட்டிலுந் துன்பச் சூழ்நிலைகள் குறைக்கப்படுகின்றன.

உங்கள் முதுமைக்காலம் சிறப்பாக அமையவும் உங்கள் முயற்சிகள் வீட்டிற்கும் நாட்டிற்கும் நன்மை பயக்கவும் உங்கள் திறமைகள் ஏனையோருக்கு உதவவும் இத்தருணத்தில் வாழ்த்துகின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.