இலங்கையை சர்வதேச நீதிமன்றம் கொண்டு செல்ல முடியாது! சுமந்திரன்

இலங்கையை சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல முடியாது. இவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ”புதிய சுதந்திரன்” பத்திரிகை வெளியீடு நேற்று நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் நடைபெற்ற போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இலங்கை தமிழரசுக் கட்சி கட்சியினுடைய பேச்சாளர் என்ற அடிப்படையில் இந்த உத்தியோகபூர்வ வெளியீடான புதிய சுதந்திரன் பத்திரிகையின் வெளியீடு காலத்தின் தேவையாகும். இதன் தேவையை மற்றைய ஊடகங்கள் கடந்த காலங்களில் எங்களுக்கு உணர்த்தியுள்ளது.

சுதந்திரன் பத்திரிகையின் காலத்தில் எப்படியாக கட்சியின் நிலைப்பாடு வெளிப்படுத்தப்பட்டது. அதனை மீளவும் வெளியிடுவதற்கான தேவையாகவுள்ளது என பலர் கூறியுள்ளார்கள்.

கட்சியினுடைய உத்தியோகபூர்வமான நிலைப்பாடு என்ன என்பதை பல வருடங்களாக அறிவிக்கத் தவறியிருக்கின்றோம்.

1983 ஆம் ஆண்டு சுதந்திரன் பத்திரிகை முடக்கப்பட்ட பின்னர் கட்சியிடைய உத்தியோகபூர்வ நிலைப்பாடு என்ன என்பதை அறிவிப்பதில் இத்தனை காலம் பின்னிற்கின்றோம். நீண்ட இடைவெளியின் பின்னர் வெளியிடப்படும் பத்திரிகையாக உள்ளது.

இப்பத்திரிகை இலங்கைத் தமிழரசுக்கட்சியின் உத்தியோகபூர்வ வெளியீடாகத்தான் வெளிவரும். உத்தியோகபூர்வ அறிவிப்பு என்னவென்று தவறிய காரணத்தினால் தான் பலவிதமான குழப்பங்கள் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இப்பத்திரிகையின் முதலாவது வெளியீட்டிலேயே சில முக்கிய விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது ஜெனிவா கூட்டத்தொடர் நடைபெற்று வருகின்றது. இக்கூட்டத் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னதாக பிரித்தானியா ஒழுங்குபடுத்திய உறுப்பு நாடுகளுக்கான கூட்டத்தில் 26 நாடுகள் பங்கு பற்றியுள்ளன.

இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ நிலைப்பாடு என்ன என்பதை கேட்டு அறிந்துள்ளார்கள். எத்தகைய அழுத்தங்கள் கொடுக்கப்பட வேண்டும் என நாங்கள் உத்தியோகபூர்வமாகக் கூறியுள்ளோம்.

தற்போது கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் நிலையில் பக்க நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றது. இம்முறை இலங்கை தொடர்பாக 32 நிகழ்வுகள் நடைபெறவுள்ளது. இவற்றை யார் நடத்துகிறார்கள் ஏன் நடத்துகிறார்கள் என்ற தெளிவில்லை.

உறுப்பு நாடுகளும் தமிழ் மக்கள் சார்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் உத்தியோகபூர்வ நிலைப்பாடு என்ன என்பதைத்தான் கேட்கின்றார்கள். சிலர் ஜெனிவா சென்று தீர்மானங்களை எதிர்க்கிறார்கள். நாங்கள் தீர்மானம் வேண்டும் என்கின்றோம்.

ஐக்கிய நாடுகள் சபையில் எவற்றைச் செய்ய முடியும்? அங்கு சென்றால் எல்லாம் கிடைத்து விடும் என்று எமது மக்களுக்கு ஊக்குவித்துள்ளார்கள். ஜெனிவாவில் அரசாங்கத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் 36 விடயங்கள் இருக்கின்றன.

இதில் மூன்று விடயங்கள் பொறுப்புக்கூறல் சம்பந்தமானது. இறுதியாக போர்க்குற்றம் சம்பந்தப்பட்டது. ஏனைய 33 விடயங்களும் மிக முக்கியமானவை.

குறிப்பாக காணி விடுவிப்பு அரசியல்கைதிகள் விடுதலை, பெண் தலைமைத்துவ குடும்பங்களின் வாழ்வாதாரம், நஷ்டஈடு, அரசியல் தீர்வு தொடர்பானவை. இவ்வாறான பலவற்றை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது.

தற்போது நடைபெற்று வரும் பிரசாரம் என்னவெனில் இந்தத் தீர்மானத்தினால் பயனில்லை. இதைக் கைவிட்டு விட்டு அரசாங்கத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டும். இதனைத்தான் தற்போது கூறி வருகிறார்கள்.

இது மக்களுக்குத் தேவையானதா யாராவது பகிரங்க வெளியில் அரசாங்கத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த முடியும் என கூறமுடியுமா இது எவராலும் முடியாது.

இந்த உண்மை எல்லோருக்கும் தெரியும். பாதுகாப்பு சபை இந்த விடயத்தை குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தாது. இந்த விடயத்தை முன்னின்று நடத்துகின்ற அமெரிக்காவே இதனைச் செய்யாது.

அமெரிக்காவே இந்த நீதிமன்றத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. 2012 ஆம் ஆண்டு தொடக்கம் இத்தகைய தீர்மானத்தை கொண்டு நடத்துக்கின்ற அமெரிக்காவே இதனை செய்யாத போது இதனைத் தெரிந்து கொண்டு மக்களுக்கு பெய்யான பரப்புரைகளைச் செய்து இதைச் செய்வோம் என்று பரப்புரை நடத்துகின்றது.

இதற்கு மாற்றுப்பிரசாரம் கிடையாது. இதை நான் சொன்னால் சுமந்திரன் சொல்கின்றார் சர்வதேச நீதிமன்றத்திற்கு செல்லமுடியாது. இலங்கையை அவ்வாறு அனுப்ப முடியாது. இலங்கையை பாதுகாக்கிறார் என ஊடகங்கள் கூறும்.

அவ்வாறு ஊடகங்கள் கூறும்போது எங்களுடைய உத்தியோகபூர்வமான காரணம் என்ன என்பதை எங்களுடைய பத்திரிகைகளில் வெளியிடுவதற்காகத்தான் புதிய சுதந்திரன் வெளியீடு செய்கின்றோம்.

எத்தகைய ஆதரவை சர்வதேசத்தில் தக்க வைக்க முடியும் என்ற போக்கிலே தான் நாங்கள் பயணிக்க முடியும். இருக்கிற ஒரே ஆதரவையும் நாங்கள் புறம்தள்ளி விட்டு வெற்றி பெற்று விடலாம் என்று வீரப்பேச்சு பேசுவது மக்களை வெகுவாகப் பாதிக்கும்.

மக்களுக்கு உண்மை தெரியும் தானே என இவ்வளவு காலமும் நாங்கள் நினைத்தோம். ஆனால் அப்படி இல்லை என்பது தேர்தல் முடிவில் வெளிவந்துள்ளது.

எங்களுடைய கட்சி எதைச் செய்கிறோம் ஏன் செய்கிறோம் என்ற நிலைப்பாட்டை அறிவிப்பது அத்தியாவசிய தேவையாகவுள்ளது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் உத்தியோகபூர்வ நிலைப்பாடு என்ன என்பதை அறிய விரும்பினால் அதற்கான இணையத்தளம் இருக்கின்றது. அதற்கான பத்திரிகை இருக்கின்றது. இதன்மூலம் உத்தியோகபூர்வமாக வெளிவரும் என்றார்.