முகநூல் முடக்கப்பட்டமை ஜனநாயக சுதந்திரத்தில் கை வைக்கும் செயற்பாடு: துரைராசசிங்கம்

முகநூல் முடக்கப்பட்டமை ஜனநாயக சுதந்திரத்தில் கை வைக்கும் செயற்பாடு என்பதை கருத்தில் கொள்ள வேண்டும் என கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் துரைராசசிங்கம் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில் நேற்று நடைபெற்ற இலங்கை தமிழரசுக் கட்சியின் சுதந்திரன் பத்திரிகை வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், உள்ளூராட்சிமன்ற தேர்தல் காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 2 கோடி ரூபா பெற்றுக்கொண்ட சம்பவம் தொடர்பான பொய்யான தகவல்கள் தெரிவிக்கப்பட்டதனால் அக்காலத்தில் மிகவும் கஸ்டமான நிலையினை அனுபவித்தோம்.

அந்த பொய்கள் மக்களை வேகமாக சென்றடைவதற்கு இன்றைய ஊடகங்களின் விரிவாக்கமும் காரணமாகும்.

முகநூல்கள் என்பது முகமூடி நூல்களாக மாறிவிட்டன. ஒருவர் தனது எழுத்துக்கு பொறுப்புக்கூற வேண்டும். தன்னுடைய முகத்தினைக் காட்டவேண்டும். அந்த முகநூலில் முகம் தெரியவேண்டும்.

கண்டியில் நடைபெற்ற செயற்பாடுகளை தொடர்ந்து முகநூல்கள் முடக்கப்பட்டுள்ளன. இதனால் நல்ல பலாபலன்கள் கிடைத்துள்ளதாக கருத்துகள் வெளியிடப்பட்டுள்ளன.

ஆனால் இது ஜனநாயக சுதந்திரத்தில் கை வைக்கும் செயற்பாடு என்பதையும் கருத்தில் கொண்டு சுதந்திரம் என்பது கட்டுப்பாடு இல்லாத ஒன்று அல்ல என்பதையும் கருத்தில் கொண்டு இந்த முகநூல் தொடர்பில் புதிய சட்ட விதிகள் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக அறிகின்றோம்.

அவ்வாறு இருக்கும்போது ஒவ்வொருவரும் தனது முகநூல் கணக்கு தொடர்பில் வெளிப்படையாக இருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.