அரச அலுவலகங்களில் மதத் தலங்கள் வைப்பது தவறான விடயம்: சிவமோகன்!

அரச அலுவலகங்களில் மதத் தலங்கள் வைப்பது தவறான விடயம் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்ட செயலகத்தில் மத நல்லிணக்கம் என்னும் பெயரில் புத்தர் சிலை வைப்பதற்கு எடுக்கும் நடவடிக்கை தொடர்பில் கேட்ட போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

மதம் சார்ந்த விடயங்களை சரியாக கையாள வேண்டும். பௌத்த மக்கள் இல்லாத இடங்களில் புத்தர் சிலைகள் வைப்பது தவறானது.

அதுபோல அரச திணைக்களங்களிலும் மதத்தலங்கள் தேவையற்றவை. குறிப்பாக வைத்தியசாலைகளில் மட்டும் இதுவரை காலமும் ஒவ்வொரு மத மக்களுக்கான மதத்தலங்கள் இருந்தன.

ஏனெனில் அங்கு வரும் நோயாளர்கள் அவர்களது நோயை குணப்படுத்த கடவுளை நம்புவார்கள். அதனால் வழிபடுவதற்காக அங்கு மதத்தலங்கள் இருந்தன.

ஆனால் மாவட்ட செயலகத்தில் அது தேவையில்லை. ஏனெனில் மாவட்ட செயலகத்திற்கு மக்கள் வழிபட செல்வதில்லை. தமது அரச தேவைகளை பூர்த்தி செய்யவே செல்கின்றனர்.

அப்படியான நிலையில் வவுனியாவில் மாவட்ட செயலகத்தில் புத்தர் சிலை வைக்க அரச அதிபர் நடவடிக்கை எடுப்பாராக இருந்தால் அது தவறான விடயம். இந்த நடவடிக்கை உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.