ஜனாதிபதியின் பொது மன்னிப்பினூடாக அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் நடத்தும் போராட்டமானது தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு இக்கட்டான ஒரு நிலைமையை ஏற்படுத்தியுள்ளது என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிவமோகன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் அமைந்துள்ள வன்னி பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிவமோகனின் பிரத்தியேக காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், காணாமல் போனவர்களை இரண்டு வகையாகப் பார்க்கலாம் ஒன்று வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் அந்தவகையில் விடுதலைப்புலிகளின் நூறுக்கும் மேற்பட்ட போராளிகள் நேரடியாக குடும்ப அங்கத்தவர்கள் மூலமாக படையினரின் கைகளில் ஒப்படைக்கப்பட்டவர்கள்.
இரண்டாவது செட்டிக்குளம் தடை முகாம்களில் நேரடியாக கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்கள்.
அது மட்டுமல்ல, விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு காணாமல் செய்யப்பட்டவர்கள், வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டபின் அவர்களுக்கான பதிவுகள் கூட இல்லாத முறையில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள்.
எனவே வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான விடயமானதும் யுத்தத்தின்போது காணாமல் போன விடயமானதும் இருக்கிறது. அதில் வலுக்கட்டாயமாக காணாமல் செய்யப்பட்டவர்களின் நிகழ்ச்சி நிரல் ஒட்டுமொத்தமாக மறைக்கப்பட்டுள்ளது.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் நடத்தும் போராட்டமானது தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு இக்கட்டான ஒரு நிலைமையை ஏற்படுத்தியுள்ளது.
அரசியல் கைதிகள் விவகாரத்தில் விடுவிக்கப்படக்கூடியவர்கள் பெருமளவில் அரசினால் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது சிறைகளிலுள்ள 150 க்கு மேற்பட்டவர்களில் பாரிய குற்றங்களை புரிந்த ஒரு தொகுதியினரும் அரசியல் கைதிகள் போல் உள்ளே இருக்கும் ஒரு நிலைமையும் இருக்கிறது. அதே போல் நேரடியாக ஆயுதங்களுடன் சம்பந்தப்பட்டு கைது செய்யப்பட்டவர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் மூலம் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை மத்திய அரசு இந்த விடயங்களில் விட்டுக்கொடுப்பு செய்வதற்கு இனவாதிகள் விடவில்லை பாராளுமன்றத்தினூடாக ஜனாதிபதி ஒரு பொது மன்னிப்பை வழங்கினால் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய முடியும்.
அரசியல் காரணங்களுக்காக பொது மன்னிப்பு வழங்க ஜனாதிபதி தயக்கம் காட்டி வருகிறார். பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கி புதிய அரசியல் சட்டத்தை உருவாக்கும் போதுதான் அரசியல் கைதிகளின் பிரச்சினை முடிவுக்கு வரும் என தெரிவித்தார்.