தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு சரிந்து விட்டது என்பது ஒரு மாயை: துரைராஜசிங்கம்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு சரிந்து விட்டது என்பது ஒரு மாயை என்பதை விளங்கிக் கொள்ளக்கூடியதாக உள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கே.துரைராஜசிங்கம் தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்ட அலுவலகத்தில் இன்றைய தினம் இடம் பெற்ற உறுப்பினர்கள் மற்றும் மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது, அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

தற்போது இருக்கின்ற அரசியல் சூழ்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகள் எவ்வாறு அமைய வேண்டும் என்பது தொடர்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் இருக்கின்ற மக்களை மாவட்டம் தோறும் சென்று சந்தித்து அவர்களின் அபிப்பிராயங்களை நாங்கள் பெற்று வருகின்றோம்.

இதன் அடிப்படையில் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாரை, முல்லைத்தீவு, வவுனியா ஆகிய மாவட்டங்களிலே நாங்கள் ஏற்கனவே சந்திப்புக்களை நடத்தி அவர்களுடைய கருத்துக்களை அறிந்திருக்கின்றோம்.

அந்த வகையிலே இன்று நாங்கள் மன்னார் மாவட்டத்திற்கு மக்களை சந்திக்க வந்தோம். காலை முதல் அதிகமான மக்கள் இங்கு வந்து தமது கருத்துக்களை கூறிச் சென்றுள்ளனர்.

மக்களின் கருத்துக்களின் அடிப்படையில் எங்களின் மக்கள் பிரதி நிதிகளை நாங்கள் அழைத்து மக்களின் கருத்துக்கள் தொடர்பாக அவர்களுக்கு தெரியப்படுத்தி பல்வேறு செயல் திட்டத்தை அமுல்படுத்தி எமது கட்சியை இன்னும் பலமான கட்சியாக எதிர் காலத்தில் செயல்படுத்துவதற்கு ஏற்ற வழி முறைகளை ஏற்படுத்திக் கொள்ள இச் செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளோம்.

மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்போடு இன்னும் அதிகளவு ஒரு மித்தவர்களாக உள்ளதை காணக்கூடியதாக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஏனைய மாவட்டங்களிலும் சென்று மக்களின் அபிப்பிராயங்களை பெற்ற பின் எமது அறிக்கையை எமது உயர் சபைக்கு சமர்ப்பிப்போம்.

அதன் பின்னர் கட்டமைப்பை உறுவாக்குதல் என்கின்ற செயற்பாட்டிற்கு வந்து இன்னும் எமது செயற்பாடுகளை முன் நின்று செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுவோம் என்றும் இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கே.துரைராஜசிங்கம் குறிப்பிட்டுள்ளார்.