மீண்டும் தவறிழைத்துள்ள இலங்கை அரசாங்கம்! சுட்டிக்காட்டியுள்ள கோடீஸ்வரன் எம்.பி

இலங்கை அரசாங்கம் சிறுபான்மையினத்தவர்களை பாதுகாப்பதில் மீண்டும் தவறிழைத்துள்ளதாக அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

கல்முனை தமிழ் பிரதேச செயலகம் ஏற்பாடு செய்திருந்த கலாச்சார விழா நேற்று கல்முனை நகரில் உள்ள உவெஸ்லி உயர்தரப் பாடசாலையின் ஒன்று கூடல் மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.

இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் கூறுகையில்,

தமிழ் மக்களை பொறுத்தவரையில் இலங்கையிலே நடைபெற்ற இனப்படுகொலை என்பது வெறுமனே தனிமனித இன அழிப்பு மாத்திரமல்ல.

இவ்வாறான இன அழிப்பானது கடந்த காலங்களிலே இந்த நாட்டில் உள்ள பேரினவாதிகளினால் அரங்கேற்றப்பட்டிருக்கின்றது.

அந்த அரங்கேற்றம் இன்னும் நின்றபாடில்லை. மாறாக தற்போதும் அது நடந்து கொண்டுதான் வருகின்றது. அதனொரு செயற்பாடுதான் இந்த நாட்டிலே மிக அண்மையில் நடைபெற்ற நிகழ்வுகளாகும்.

இந்த நாட்டை பொறுத்தவரையில் தற்போது சட்டம், ஒழுங்கு என்பன கேள்விக்குறியாகிக் கொண்டிருக்கும் நிலையினை காணமுடிகின்றது.

நாட்டின் அரசாங்கம் சிறுபான்மையினத்தவர்களை பாதுகாப்பதில் மீண்டும் தவறிழைத்திருக்கின்றது.

கடந்த காலங்களில் எவ்வாறு தமிழர்களுக்கு எதிராக அநீதி இழைக்கப்பட்டதோ அதே போன்றதொரு நிலைதான் இன்று முஸ்லிங்களுக்கு எதிராக நடைபெற்றிருக்கின்றது என தெரிவித்துள்ளார்.