வடக்கில் சிங்களவர்களுக்கு அரச நியமனம்: புள்ளிவிபரங்களுடன் சபையில் சிறீதரன் MP

21.02.2018 அன்று பாராளுமன்றத்தில் நடைபெற்ற மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதி தொடர்பான விவாதத்திலே கலந்துகொண்டு உரையாற்றும் போது

வடக்கில் வாழுகின்ற இளைஞர், யுவதிகள் வேலைவாய்ப்பில் புறக்கணிக்கப்பட்டு, தென்பகுதியிலே இருக்கின்ற பெரும்பான்மைச் சிங்கள சமூகத்தைச் சேர்ந்த இளைஞர், யுவதிகள் அங்கே வேலைக்கு அமர்த்தப்படுகிறார்கள்.

குறிப்பாக, நேற்றைய தினம்கூட யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்திற்குச் சாரதிகளாகவும் மற்றும் அலுவலக உதவியாளர்களாகவும் 9 பேர் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

கடந்த தேர்தல் முடிந்த மறுநாளே, தென்பகுதியிலே இருக்கின்ற சிங்கள இளைஞர், யுவதிகள் வலுக்கட்டாயமாக அங்கே நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இதனால் அங்கிருக்கின்ற இளைஞர், யுவதிகள் பலர் விரக்தி நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

இந்தத் திட்டமிட்ட நடவடிக்கை ஏன், மேற்கொள்ளப்படுகின்றது? என்பதை இந்த நாட்டிலே நல்லிணக்கம் பேசி வருகின்ற அரசு தெளிவுபடுத்த வேண்டும்.

அண்மையிலே நடந்த தேர்தலுக்கு 10 நாட்களுக்கு முதல் கிளிநொச்சி மின்சார சபை அலுவலகத்தில் 14 மின்மானி வாசிப்பாளர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

அவர்கள் அனைவரும் சிங்கள இளைஞர்கள். அதாவது, முற்றுமுழுதாகத் தமிழ்மொழி பேசுகின்ற, தமிழர்களை முழுமையாகக் கொண்ட ஒரு மாவட்டத்தில் சிங்கள இளைஞர்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றார்கள்.

கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களாக அங்கு மின்மானி வாசிப்பாளர்கள் எவரும் இருக்கவில்லை.

இந்த ஒன்றரை வருடங்களாக அங்குள்ள வீட்டுப்பாவனையாளர்களிடமும் சரி, கடை பாவனையாளர்களிடமும் சரி மின்சாரக் கட்டணங்கள் அறவிடப்படவில்லை.

அதற்குச் சொல்லப்பட்ட காரணம், மின்மானி வாசிப்பாளர்கள் இல்லை என்பதாகும்.

ஆனால், இந்தத் தேர்தல் நடைபெறுவதற்கு முதல் வாரம் கிளிநொச்சி மின்சார சபைக்கு 14 சிங்கள இளைஞர்கள் மின்மானி வாசிப்பாளர்களாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.
அவர்கள் அங்குள்ள வீடுகளுக்குச் சென்று சிங்கள மொழியிலே பேசி, மின்மானி பற்றிய விடயங்களைக் குறித்துக்கொள்கின்றார்கள்.

இது எவ்வளவு மோசமானது! யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இளைஞர், யுவதிகள், யுத்தம் நடந்து முடிந்ததற்குப் பிற்பாடும் வேலை வாய்ப்பில்லாமல் இருக்கும்போது,

இந்த நாட்டிலே சமாதானம், நல்லிணக்கம் தொடர்பாகப் பேசிக்கொண்டிருக்கின்ற இந்த அரசாங்கம் இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்வது மிகமிக மோசமான காரியம் என்பதை இந்த இடத்திலே பதிவு செய்ய விரும்புகின்றேன். ஆகவே, முதலிலே இந்த நடைமுறைகள் திருத்தப்பட வேண்டும்.