தமிழர்களின் போராட்டங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் மழுங்கடிக்காது: செல்வம் அடைக்கலநாதன்

காணாமல்போனோர் தொடர்பில் அண்மையில் கொண்டுவரப்பட்ட சட்ட மூலத்தில் கடந்த காலத்தில் நடந்த சம்பவங்கள் சேர்க்கப்படவில்லை என்று சிலர் தெரிவித்து வருவதை ஏற்றுக்கொள்ளமுடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளுராட்சிமன்ற தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற டெலோ உறுப்பினர்களுக்கான கூட்டம் இன்று மாலை நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது, தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

தமிழர்கள் மேற்கொள்ளும் போராட்டங்களை மலினப்படுத்தும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்படாது எனவும் அவர் கூறியுள்ளார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது வடக்கு கிழக்கில் பின்னடைவை சந்தித்திருக்கின்றது.

அது மக்களிடம் செல்லவில்லை என்ற குறை இருக்கின்றது. மக்களுடைய பிரச்சினைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கையாண்ட விதத்தினை மக்களிடம் சொல்லவில்லை.

தமிழ்க் கட்சிகளுக்குள் காணப்பட்ட ஒற்றுமையின்மை மக்கள் மத்தியில் வெறுப்பை உருவாக்கியிருந்தமை போன்றவை இதற்கான காரணங்களாகும்.

காணாமல் போனோர் காரியாலயம் சர்வதேச நீதிபதிகளைக்கொண்டு விசாரித்து நல்ல தீர்ப்பு வழங்கவேண்டும் என்ற ஐ.நா தீர்மானத்தின் அடிப்படையில் இலங்கை அரசாங்கம் நாடாளுமன்றத்திலே இந்தக் காரியாலயத்தை அமைத்திருந்தது.

எதிர்வரும் காலங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் தொடர்ந்தும் இந்த நாட்டில் நடைபெறக்கூடாது என்ற சட்டத்திற்கு நாங்கள் ஆதரவளிக்கின்றோம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தமிழ் மக்களின் போராட்டத்தை மழுங்கடிக்க செய்கின்ற எந்தவொரு வேலையையும் செய்யாது.

இதேவேளை, இன்று ஜனாதிபதிக்கும் பிரதமருக்குமிடையே பிரச்சினைகள் தோன்றியுள்ளன. பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.

அது கொண்டுவரப்படும் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது சரியானதொரு முடிவை எடுக்கும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.