விடுதலைப் போராட்டத்திற்கு விதை விதைத்தது தமிழரசுக் கட்சியே!

நாட்டில் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்திற்கு விதையினை விதைத்தது தமிழரசுக் கட்சியே என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு – மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புதுக்குடியிருப்பு டொல்பின் விளையாட்டு கழகத்திற்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றுள்ளது.

இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் கூறுகையில்,

தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வந்த இன அழிப்பு போராட்டம் விடுதலைப் போராட்டமாக மாறிய நிலையில் 2009 தமிழர்களின் விடுதலைப் போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் அந்த இனசுத்திரிப்பு நடவடிக்கைகள் மாற்றமடைந்து அம்பாறையிலும், கண்டியிலும் சிறுபான்மையாகவுள்ள முஸ்லிம் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

முஸ்லிம் மக்களும் ஒன்றை உணர்ந்து கொள்ள வேண்டும். தமிழ் மக்கள் துன்புறுத்தப்பட்ட வேளையில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட போது தமிழர்களுக்கு ஆதரவாக அவர்கள் குரல் கொடுக்கா விட்டாலும் முஸ்லிம் மக்கள் பாதிக்கப்படும் போதேல்லாம் தமிழ் மக்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.

இன்றைக்கும் முஸ்லிம் மக்கள் பாதிக்கப்பட்ட போது அதற்கு எதிராக எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் குரல் கொடுத்து வருகின்றார்.

இனங்களிடையே வன்முறைகளையும், விரிசல்களையும் ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்கள், வைபர், வட்சப் போன்ற சில இருந்துள்ளதை கடந்த காலத்தில் இருந்துள்ளது. அவை முடக்கப்பட்டு இன்று சுமுகமான நிலைக்கு வந்துகொண்டுள்ளது.

இந்த நிலையில் வடக்கு, கிழக்கில் புதிய புதிய பத்திரிகைகள் உட்பட ஊடகங்கள் வந்து கொண்டிருக்கின்றன. பத்திரிகைகள் ஊடகத்தின் ஒரு பகுதியாகும். ஊடகம் என்பது சமுதாயத்தின் குரல் என்பார்கள்.

1985ஆம் ஆண்டுக்கு முன்னர் நிறுத்தப்பட்டிருந்த சுதந்திரன் பத்திரிகை சில தினங்களுக்கு முன்னர் வெளிவந்தது. இலங்கை சுதந்திரம் அடைந்ததில் இருந்து 1983ஆம் ஆண்டு வரைக்கும் தமிழர்களின் உரிமை, அவர்களின் பிரச்சினை தொடர்பில் வெளியுலகுக்கு கொண்டு வந்தது இந்த சுதந்திரன் பத்திரிகையாகும்.

இந்த நாட்டில் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்திற்கு விதையினை விதைத்தது தமிழரசுக் கட்சியாகும். அக்காலத்தில் தமிழர்களுக்கு எதிராக அநியாயங்கள் நடக்கும் போது அதற்கு எதிராக பல்வேறு சத்தியாக்கிரக போராட்டம் உண்ணாவிரத போராட்டங்களை நடத்தியது தமிழரசுக் கட்சியாகும்.

தமிழர்களின் உரிமைகள் பெறப்பட வேண்டும் என்பதற்கான போராட்டங்களை நடத்தி அடிவாங்கி விதையினை விதைத்தார்கள். எனினும் அந்த விதைக்கு நீர் ஊற்றி வளர்த்தெடுத்தது இந்த சுதந்திரன் பத்திரிகையென்பதை இன்றைய இளைஞர்கள் அறிந்திருக்க மாட்டார்கள்.

விடுதலைப் போராட்டத்தினை விருட்சமாக மாற்றியது தமிழ் தேசிய விடுதலைக்காக போராடிய விடுதலை இயக்கங்கள் தான் என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது. சுதந்திரன் பத்திரிகையானது ஒரு காலத்தில் விடுதலை இயக்கங்கள் உருவாவதற்கும், விடுதலை இயக்கங்களுக்கு இளைஞர்கள் செல்வதற்கு தூண்டுகோலாக இருந்தது.

இன்று மீள வந்துள்ள புதிய சுதந்திரன் பத்திரிகைக்கு ஒரு கடமையுள்ளது. தமிழ் மக்களையும், தமிழ் மக்களுக்காக போராடிய இயக்கங்களையும் கட்சிகள் அனைத்தையும் ஒன்றிணைத்து தமிழ் தேசிய கூட்டமைப்பு எதற்காக உருவாக்கப்பட்டதோ அந்த நோக்கத்தினை அடைவதற்கு பணியாற்ற வேண்டும்.

வட மாகாணத்தினை பொறுத்தவரையில் அங்கு எந்த கட்சி வந்தாலும் தமிழர்களே ஆட்சியமைக்கும் நிலையேற்படும். கிழக்கு மாகாணத்தில் அந்த நிலையில்லை. கிழக்கு மாகாண தமிழர்கள் பல வழிகளிலும் பாதிக்கப்பட்டு ஒடுக்கப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.