அரச புலனாய்வாளர்களின் கைகளில் சிக்கியுள்ள நீதித்துறை! சிவமோகன் எம்.பி

நாட்டின் நீதித்துறை அரச புலனாய்வாளர்களின் கைகளில் சரணாகதி அடைந்துள்ளது. தமிழர்களுக்கான நீதி தொடர்ந்தும் மறுக்கப்படுகிறது என நடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்

கடந்த வியாழக்கிழமை வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த சண்முகநாதன் தேவகன் எனும் அரசியல் கைதி ஒருவர் தனது 70ஆவது வயதில் மாரடைப்பால் மரணமடைந்தார்.

10 வருடங்கள் சிறையில் தனது வாழ்க்கையைக் கழித்த பின் இரண்டு வருடங்கள் தண்டனை வழங்கப்பட்டது எனத் தெரியவருகிறது.

இவர் மீது விடுதலைப்புலிகளுக்கு வாகன வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தார் என குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. எனவே மேலதிகமாக 8 வருட தண்டனை அனுபவித்த ஒருவருக்கு மீண்டும் ஒரு பொய் வழக்கு, பொய்சாட்சியங்கள் புனைந்து மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டது அநியாயம்.

இதுதான் சிறையில் இருக்கும் சகல அரசியல் கைதிகளுக்கும் நடந்து வந்த நடக்கப்போகும் நிகழ்வாகும். நாட்டின் நீதித்துறை அரச புலனாய்வாளர்களின் கைகளில் சரணாகதி அடைந்துவிட்டது என்பதற்கு இது ஒரு உதாரணமாகும்.

பொய்ச்சாட்சி கூறும் அப்பாவி மக்களை பகிரங்க நீதிமன்றில் தண்டனைக்கு உட்படுத்தும் நீதிமன்றம், பொய் வழக்கு புனைபவர்களையும், பொய்ச்சாட்சி தயார் செய்யும் புலனாய்வாளர்களையும் தண்டிக்காது கண்ணை மூடிக்கொண்டு அப்பாவிகளின் மீது திணிக்கப்படும் இன ரீதியான அநீதிகள் உடன் நிறுத்தப்பட்டே ஆகவேண்டும்.

தவறும் பட்சத்தில் மீண்டும் தமிழினம் தனக்கு நீதி வேண்டி வீதியில் இறங்க வேண்டிய நிலையை நிர்ப்பந்திப்பதாக அமையும்.

அத்துடன், நேரடி போராட்ட களத்தில் விடுதலைப்புலிகளுடன் செயற்பட்டவர்கள் அரச புலனாய்வாளர்களுடன் கைகோர்த்து செயற்பட்டதற்காக கௌரவிக்கப்படுகிறார்கள்.

ஆனால் அப்பாவிகள் ஆணி வாங்கி கொடுத்ததற்கும், வாகன வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்ததற்கும் சிறையில் அடைக்கப்படுகின்றார்கள். எனவே உடன் செயற்படும் வண்ணம் நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும்.

அனைத்து அரசியல் கைதிகளும் ஒரே தடவையில் அரசியல் மன்னிப்பு வழங்கப்பட்டு விடுவிக்கப்பட வேண்டும். தவறின் ஐ.நா சபை இணைந்த வடக்கு, கிழக்கில் சுயாட்சி கோரி சர்வசன வாக்கெடுப்பை நடத்தி, தமிழ், முஸ்லிம் மக்களின் சுய தீர்ப்புக்கு விட்டுக்கொடுக்க வேண்டும்.

தமிழ் பேசும் மக்கள் தனி அலகாக, சுயநிர்ணய உரிமையுடன், நீதி மறுக்கப்படாது, தம்மைத் தாமே ஆளும் நியமம் உருவாக்கப்படுவதே ஒரே தீர்வாக அமையும் என குறிப்பிட்டுள்ளார்.