சத்தியலிங்கத்தின் தலையீட்டால் விகாரை அமைக்கும் பணி நிறுத்தம்

வவுனியா மாவட்ட செயலகத்தில் திங்கட்கிழமை அடிக்கல் நாட்டப்படவிருந்த மத வழிபாட்டுத்தளம் என்ற தோரணையிலான பௌத்த விகாரை அமைக்கும் பணி வட மாகாண சபை உறுப்பினர் ப. சத்தியலிங்கத்தின் தலையீட்டால் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்ட செயலகத்தில் பண்டாரவன்னியன் சிலைக்கு பின்புறமாகவும் செயலகத்தின் பிரதான வாயிலுக்கு முன்பாகவும் பௌத்த கட்டடக்கலையை பிரதிபலித்து முப்படையினரின் அனுசரணையில் வழிபாட்டு தலம் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

நாளை திங்கட்கிழமை அதற்கான அடிக்கல் நாட்டும் பணிகள் இடம்பெற்றுவந்த நிலையில் ஊடகங்கள் வாயிலாக இவ்விடயம் வெளிக்கொணரப்பட்டு சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இதனையடுத்து வட மாகாண சபை உறுப்பினர் ப. சத்தியலிங்கம் இவ்விடயம் தொடர்பாக ஊடக அறிக்கையொன்றினை முதலில் விடுத்திருந்ததன் அடிப்படையில் இவ்விடயம் தொடர்பாக அவரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது,

மாவட்ட செயலகத்தில் வழிபாட்டு தலம் அமைப்பது தொடர்பாகவும் அது பௌத்த விகாரையெனவும் எனக்கு அறியக்கிடைத்தது.

இதன் அடிப்படையில் இதனை நிறுத்துமாறு ஊடக வாயிலாக அறிக்கையினை விடுத்திருந்தபோதிலும் அதற்கு பின்னரும் இவ் வேலைத்திட்டம் தொடர்வதாக தெரியவந்த நிலையில் உள்நாட்டலுவல்கள் அமைச்சருடன் தொடர்புகொள்ள முயற்சித்திருந்தேன். அது பயன் அளிக்காமையினால் நேரடியாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபருடன் கலந்துரையாடியுள்ளேன்.

இதன் பிரகாரம் மாவட்ட செயலகத்தில் சர்வமதங்களையும் உள்ளடக்கிய வழிபாட்டு தலமே அமைக்க திட்டமிட்டுள்ளதாக அவர் என்னிடம் தெரிவித்தார்.

எனினும் தற்போதைய நிலையில் மாவட்ட செயலகத்தில் இவ்வாறான வழிபாட்டு தலத்தின் தேவை குறித்து கேள்வி எழுப்பியிருந்தேன்.

உத்தியோகத்தர்களின் விருப்பத்திற்கு அமையவே அதனை தான் அமைக்க முயற்சித்ததாக தெரிவித்ததுடன் அனைத்து மதங்களையும் உள்ளடக்கி அதனை அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

எனினும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்த நான் தமிழ் மக்கள் அதிகமாக உள்ள பிரதேசத்தில் சர்ச்சைக்கு மத்தியில் இவ்வாறான வழிபாட்டு தலத்தினை அமைப்பதை உடன் நிறுத்தி பிரதேசத்தின் ஒற்றுமைக்கு வழிசமைக்குமாறு கேட்டிருந்ததுடன் அவ்வாறு அமைக்க வேண்டிய தேவையேற்படின் வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் கலந்துரையாடுவோம் எனவும் கூறியிருந்தேன்.

இதன் அடிப்படையில் இவ்வேலைத்திட்டத்தினை நிறுத்துவதாக அரசாங்க அதிபர் உறுதியளித்துள்ளார் என வட மாகாணசபை உறுப்பினர் தெரிவித்தார்.