த.தே.கூ. தீர்க்கமான முடிவை எடுக்கவேண்டும்: நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதிநிதிகள் சிறீதரனிடம் வலியுறுத்தல்!

இலங்கை தொடர்பான ஜெனிவா பிரேரணையை அமுல்படுத்துவதில் இலங்கை அரசாங்கம் கடந்த மூன்று வருடங்களில் எதனையும் செய்யவில்லை.

இலங்கைக்கான கால அவகாசம் முடிவடைவதற்கு இன்னும் ஒரு வருடமே எஞ்சியுள்ள நிலையில் அரசாங்கம் எதனையும் செய்யாது என்பது புரிகின்றது.

எனவே இந்த கட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்க்கமான தீர்மானம் ஒன்றை எடுக்கவேண்டும் என்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஜெனிவா கூட்டத் தொடரில் பங்கேற்கும் நோக்கில் ஜெனிவா வந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனை,

நேற்று வௌ்ளிக்கிழமை ஜெனிவா வளாகத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகளான மாணிக்கவாசகர் மற்றும் மணிவண்ணன் ஆகியோர் இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளனர்.

இந்த சந்திப்பின்போது கருத்து வெளியிட்ட நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகள் குறிப்பிடுகையில்,

2019 ஆம் ஆண்டுடன் ஜெனிவா பிரேரணையை அமுல்படுத்த வழங்கப்பட்ட கால அவகாசம் முடிவுக்கு வந்துவிடும்.

இந்நிலையில் கடந்த மூன்று வருடங்களில் எதனையும் செய்யாத அரசாங்கம் எதிர்வரும் ஒரு வருட காலத்தில் பொறுப்புக்கூறலை முன்னெடுக்கும் என்று எதிர்பார்க்க முடியாது.

எனவே அரசாங்கம் எதனையும் செய்யப்போவதில்லை என்பது தெளிவாகிவிட்டது. அந்தவகையில் தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு தீர்க்கமான தீர்மானத்தை எடுத்து அறிவிக்கவேண்டும்.

நாங்கள் இலங்கை விவகாரம் தொடர்பில் சர்வதேச நாடுகளுடன் பேச்சு நடத்தும்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுகின்றதே என்று எம்மிடம் சர்வதேச நாடுகள் கேள்வியெழுப்புகின்றன.

தற்போது இலங்கை விவகாரம் சர்வதேச நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்படவேண்டும் என்று புலம்பெயர் அமைப்புக்கள் வலியுறுத்துகின்றன.

இவ்வாறு அழுத்தம் பிரயோகிப்பதன் மூலமே தமிழர்கள் தீர்வைப் பெறலாம் என்றார்.

இந்த சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் குறிப்பிடும்போது,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிதானமாக பொறுமையோடு செயற்பட விரும்புகின்றது என்றும்இ

அத்தோடு சர்வதேசத்துடன் இணைந்து வேறு வழிகளில் எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம் என்பதனை ஆராய்வோம் என்றும் குறிப்பிட்டார்.

அத்துடன் இலங்கை விவகாரத்தை சர்வதேச நீதிமன்றத்துக்கு எவ்வாறு கொண்டு செல்வது என்பது குறித்த வழிவகைகளை கூறவேண்டும்.

நாம் பொறுமை காக்கின்றோம். முடியாத பட்சத்தில் சர்வதேசத்துடன் இணைந்து செயற்படுவோம் என்றார்.