அரசியல் கைதி ஆனந்த சுதாகரனை விடுதலை செய்யக்கோரி கையெழுத்து போராட்டம்! சிறீதரன் அழைப்பு!

ஆயுள் தண்டனை வழங்கப்பட்ட கிளிநொச்சியை சேர்ந்த அரசியல் கைதி சச்சியானந்தம் ஆனந்த சுதாகரனை உடனடியாகவே பொதுமன்னிப்பு அளித்து நிபந்தனையின்றி விடுதலை செய்யவேண்டி கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கவுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

கடந்த 2008 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்ட பின்னர் கடந்த வருடம் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் கைதியான சச்சிதானந்தம் ஆனந்த சுதாகரனின் மனைவி ஆனந்த சுதாகர் யோகராணி கடந்த 15 ஆம் திகதி சுகயீனம் காரணமாக உயிரிழந்தார்.

இவருடைய இறுதிக் கிரியைகள் நேற்று கிளிநொச்சி, மருதநகர் கிராமத்தில் இடம்பெற்றபோது மனைவியின் இறுதிக் கிரியைகளில் கலந்து கொள்வதற்காக பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் மூன்று மணி நேரமே கால அவகாசம் வழங்கப்பட்டு மனைவியின் மரணச்சடங்கில் கலந்து கொண்டார்.

மீண்டும் பொலிஸாரால் சிறைச்சாலை வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இதன்போது தந்தை சிறைச்சாலை வாகனத்தில் ஏறியபோது அவரது மகளும் தந்தையுடன் சிறைச்சாலை வாகனத்தில் ஏறிய சம்பவம் அனைவரது மனதையும் நெகிழ வைத்துள்ளது.

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் கைதியான ஆனந்த சுதாகருக்கு மகனும் மகளும் என இரு பிள்ளைகள் உள்ளனர். தந்தை கடந்த 2008 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட பின்னர் தாயின் அரவணைப்பில் வாழ்ந்த இரண்டு பிள்ளைகளும் தற்போது தந்தையையும் தாயையும் இழந்த நிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழர்களைப் பொறுத்தவரையில் மட்டுமல்ல மனித நியாயத்தின், நேயத்தின் அடிப்படையில் வாழும் இலங்கை மக்கள் அனைவரும் கண் கலங்கிடும் நிகழ்வுதான் இது.

சத்தியானந்தம் ஆனந்த சுதாகரன் மகசீன் சிறையில் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டு நீதிமன்றின் ஊடாக அவருக்கு 97 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.

கடந்த 2008 இலிருந்து தசாப்த காலமாக அரசியல் கைதியாகச் சிறைப்பிடிக்கப்பட்ட இவர்; ஆயுள் கைதியாகி மகசீன் சிறைச்சாலையில் இருந்து வரும் நிலையில் இரு குழந்தைகளையும் அநாதரவாக இவ்வுலகில் தங்களின் நாட்டில் பரிதவிக்க விட்டு விட்டு இவரது மனைவி கடந்த 15.03.2018 அன்று இறந்துவிட்டார்.

இவர் மீண்டும் திரும்பிச் சிறைக்குச் செல்கையில் அவரின் பெண்குழந்தையும் சிறைச்சாலை வண்டியினுள் தந்தையுடன் ஏறியது அனைவரையும் கண்ணீர் சிந்தி அழ வைத்தது.

இவரை நிபந்தனையற்ற பொது மன்னிப்பில் ஜனாதிபதி விடுதலை செய்யக்கோரி கிளிநொச்சி மாவட்டம் பூராக ஐந்து ஆயிரத்துக்கு மேற்பட்ட கையெழுத்துக்களை பெற்று நாட்டின் ஜனாதிபதியின் கவனத்தையும் சர்வதேச நாடுகளின் அவதானத்தையும் பெற்று விடுதலையை துரிதப்படுத்த அனைத்து பொது அமைப்புக்கள், இளைஞர்கள், புத்திஜீவிகள் உணர்வாளர்கள் அனைவரையும் ஒன்று திரட்டவுள்ளதாக குறிப்பிட்டார்.