இலங்கை விவகாரம் சூடுபிடிப்பு: அமெரிக்காவில் களமிறங்கினார் சுமந்திரன்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை கொழும்பு முழுமையாக நடைமுறைப்படுத்தத் தவறி வரும் நிலையில், அதனை செய்விப்பதற்கான மாற்று வழிகளுக்கு அமெரிக்கா தலைமை தாங்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தவுள்ளது.

போருக்குப் பின்னரான இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலை ஊக்குவிப்பதற்கான தீர்மானம் ஒன்று கொழும்பு அரசின் இணை அனுசரணையுடன் 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது.

நிலைமாறுகால நீதியைச் செயற்படுத்துதல், இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணுதல் உள்ளிட்ட பல விடயங்களை இலங்கை அரசு நிறைவேற்ற வேண்டும் என்று அந்தத் தீர்மானம் வலியுறுத்தியது. அதற்காக இரண்டு வருட கால அவகாசமும் வழங்கப்பட்டது.

ஆனால், அந்த காலப் பகுதிக்குள் கொழும்பு அந்த தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து 2017ஆம் ஆண்டில் மற்றொரு தீர்மானமும் கொழும்பின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்டது.

2015ஆம் ஆண்டு தீர்மானத்தில் சொல்லப்பட்டு கொழும்பு அரசு நிறைவேற்றாதுள்ள விடயங்கள் அனைத்தையும் நிறைவேற்றும்படி புதிய தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டது.

புதிய தீர்மானத்தைக் கொழும்பு செயற்படுத்தும் விதம் குறித்து ஒரு வருட காலத்தில் (2018 மார்ச்) வாய்மூல அறிக்கையையும், இரண்டு வருட காலத்தில் (2019 ஒக்டோபர்) முழுமையான அறிக்கையையும் மனித உரிமைகள் ஆணையாளர் பேரவைக்குச் சமர்ப்பிக்கவேண்டும் என்றும் அந்தத் தீர்மானம் கோரியிருந்தது.

அதன் அடிப்படையில் தீர்மானத்தின் மீதான இடைக்கால அறிக்கையை மனித உரிமைகள் ஆணையாளர் செயித் அல் – ஹுசைன் அண்மையில் வெளியிட்டிருந்தார்.

அதில், தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதை இலங்கை அரசு கிட்டத்தட்டக் கைவிட்டு விட்டதனால் மாற்று வழிகளை உலக நாடுகள் பரிசீலிப்பதற்குப் பரிந்துரைப்பதாகத் தெரிவித்திருந்தார்.

அவரது பரிந்துரைப்படி ஐ.நா. தீர்மானத்தைக் கொழும்பு அரசு முற்றாக நடைமுறைப்படுத்துவதற்கான அழுத்தத்தை அதற்குக் கொடுக்கும் வகையிலான நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா தலைமை தாங்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தவுள்ளது.

வாஷிங்டன் சென்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கான அமெரிக்க நிரந்த வதிவிடப் பிரதிநிதி நிக்கி ஹோலியையும், அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள அதிகாரிகளையும் சந்தித்து இந்த விடயங்களை வலியுறுத்தவுள்ளார்.

“ஐ.நா.வுக்கான அமெரிக்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி நிக்கி ஹேலியை நாளை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்திலும், தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலர் அலிஸ் ஜி வெல்ஸை மறுநாள் செவ்வாய்க்கிழமையும் நேரில் சந்தித்துப் பேசவுள்ளேன்.

அந்தச் சந்திப்பில் இலங்கை மீதான மாற்று நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா தலைமை தாங்க வேண்டும் என்று வலியுறுத்துவேன்” என்று எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். அமெரிக்காவுக்கு நேற்றுமுன்தினம் இரவு புறப்படுவதற்கு முன்னதாக அவர் இதனைக் கூறினார்.

“இலங்கை பொறுப்புக்கூறல் விடயத்தில் எதுவும் செய்யவில்லை. இதனால் இலங்கை விவகாரத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்துவதற்காக, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை மீது உலகளாவிய நியாயாதிக்கத்தை அழுத்துவதற்கு உறுப்பு நாடுகளைத்தான் ஊக்குவிக்கவுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

சில நாடுகளில், வேறு நாடுகளின் போர்க்குற்றவாளிகளைக் கைதுசெய்து விசாரிக்கவும், தண்டனை வழங்கவும் சட்ட ஏற்பாடுகள் உள்ளன. அதனை அந்தந்த நாடுகள் செயற்படுத்த வேண்டும்.

இதுவே ஆணையாளர் வலியுறுத்தும் உலகளாவிய நியாயாதிக்கம். இதனை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையினால் நேரடியாகச் செயற்படுத்த முடியாது.

எனவே, அதனைச் செய்வதற்கு அமெரிக்க தலைமையேற்க வேண்டும். போர்க்குற்றவாளிகளைத் தண்டிப்பதற்கான சட்ட ஏற்பாடுகள் உள்ள ஏனைய நாடுகளும் அதனைச் செயற்படுத்துவதற்கு ஊக்குவிக்க வேண்டும்.

அதனையே நான் வலியுறுத்தவுள்ளேன்” என்று சுமந்திரன் எம்.பி. மேலும் தெரிவித்தார். சுமந்திரனின் அமெரிக்கச் சந்திப்புக்களை உலகத் தமிழ் பேரவையினர் ஏற்பாடு செய்துள்ளனர்.