எங்களிடம் ஒற்றுமையிருக்கவில்லை: சீ.யோகேஸ்வரன்!

கிழக்கு மாகாணசபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இரண்டு அமைச்சுகளை பெற்றிருந்தபோதிலும் அதன் பூரண பயன்பாட்டை தமிழ் மக்கள் அனுபவிக்கவில்லை.

இதனை தாங்கள் ஏற்றுக்கொள்வதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் உள்ளூராட்சிமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற உறுப்பினர்களுக்கான விசேட கூட்டம் இன்று காலை மட்டக்களப்பில் நடைபெற்றது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு தாண்டவன்வெளி கூட்டுறவு சங்க மண்டபத்தில் இந்த கூட்டம் நடைபெற்றது.

இதன்போது உள்ளூராட்சி மன்றங்களின் செயற்பாடுகள் அதன் சட்ட வரையறைகள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் பங்களிப்பு உட்பட உள்ளூராட்சி மன்றம் தொடர்பில் விசேட கருத்தரங்கும் நடாத்தப்பட்டது.

இந்த கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 79 உறுப்பினர்களும், அம்பாறை மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 27 உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

“மட்டக்களப்பு மாவட்டத்தில் முதன்முறையாக உள்ளூராட்சி மன்றத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பங்குபற்றுகின்றது.

அனைவரையும் ஒன்றிணைத்து தமது கொள்கையுடன் உடன்பட்டுச்செல்லும் நிலையினை உள்ளூராட்சி தலைமைத்துவங்கள் ஏற்படுத்தவேண்டும்.

உள்ளூராட்சி சபைகளில் எதிர்க்கட்சி என்ற ஒன்று உருவாக்கப்படுவதில்லை. ஆனாலும் பலர் எதிராக இருந்துகொண்டிருப்பார்கள்.

எங்களது செயற்பாடுகளை அவர்களையும், எங்களையும் இணைக்கும் வகையில் முன்னெடுக்கவேண்டும்.

உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களிடம் பொது உணர்வு ஏற்படவேண்டும்,சுயநலம் குறைக்கப்படவேண்டும். இன்று எதிர்க்கட்சியில் இருக்கும் நாங்கள் வாடகைக்குகூட வீடு ஒன்றை பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் உள்ளோம்.

அவ்வாறு வீடு ஒன்றை பெறும்போது அதனை கோடிக்கணக்கில் வாங்கியதாக விமர்சனம் செய்யும் நிலையும் உள்ளது. இது தொடர்பில் உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

மக்கள் எம்மீது நல்ல அபிப்பிராயம் ஏற்படும் வகையில் செயற்பாடுகள் இருக்க வேண்டும் .உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் உள்ளூராட்சி மன்றங்களை வைத்து உழைக்கும் நிலையினை அனுமதிக்கமாட்டோம்.

கடந்த காலத்தில் சில தவறுகள் நடைபெற்றுள்ளது.அதனை நாங்கள் ஏற்றுக்கொண்டேயாக வேண்டும். கிழக்கு மாகாணசபையில் இரண்டு அமைச்சுகளை பெற்றிருந்தபோதிலும் அதன் பூரண பயன்பாட்டை தமிழ் மக்கள் அனுபவிக்கவில்லை.

இதனையும் ஏற்றுக்கொண்டேயாக வேண்டும். கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் மூலம் ஒரு இடமாற்றத்தினைக்கூட செய்யமுடியாத நிலையில் இருந்தோம்.

பாடசாலைகளில், பொது மண்டபங்களில் முன்னாள் முதலமைச்சரின் புகைப்படம் தொங்கிய நிலையில் அவற்றினை அகற்ற நடவடிக்கையெடுக்குமாறு கல்வி அமைச்சருக்கு கடிதம் எழுதியபோது அதிபர்களுக்கு அகற்ற முடியும் என்றால் முயற்சி செய்யுங்கள் என்று கேட்டிருந்தார்.

பாடசாலைகளில் கூட அரசியல்வாதிகளின் பெயர்கள் இருக்க முடியாது. நாங்கள் பலவற்றைசெய்ய தவறியிருக்கின்றோம்.

எங்களிடம் சரியான ஒற்றுமையிருக்கவில்லை. எங்களது பிரதிநிதிகளின் ஆலோசனைகளைப்பெற்று சில நடவடிக்கைகளை மேற்கொள்ள முயற்சிசெய்யவில்லை.

இன்றுகூட சில உயர் அதிகாரிகள் அரசியல்வாதிகள்போல் செயற்படுகின்றார்கள். கடந்த தேர்தலிலும் அரசியல்வாதிகள் போல் செயற்பட்டார்கள். தங்களுக்கு கீழ் உள்ள உத்தியோகத்தர்களிடம் இந்த கட்சிக்கு ஆதரவு தெரிவியுங்கள் என்று கூறியுள்ளனர்.

அவ்வாறானவர்கள் கடந்த காலத்தில் வேறு கட்சிகளில் உறுப்புரிமை பெற்று அக்கட்சி கூட்டங்களில் கலந்துகொண்டவர்கள் என்பதை எமது அமைச்சர்களிடம் சுட்டிக்காட்டியிருந்தோம். அன்று அதற்கு எதிராக அவர்கள் நடவடிக்கையெடுக்காத காரணத்தினால் இன்றும் அந்த பிரச்சினையை எதிர்கொண்டுள்ளோம்” என அவர் மேலும் தெரிவித்தார்.