சிங்கள மயமாகும் திருகோணமலை நகர்! சி.வி. ஆதங்கம்!

“நாட்டை முழுமையாக சிங்கள மயமாக்கு நோக்கில் ஒரு சாரார் முயன்று வருகின்றனர். திருகோணமலை நோக்கி இன்று வந்த போது இந்த நகரத்தைச்சுற்றி சிங்கள மக்கள் முழுமையாக ஆக்கிரமிப்பதை அவதானித்தேன்.”

இவ்வாறு வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். திருகோணமலையில் இன்று இடம்பெற்ற தமிழ் மக்கள் பேரவையின் கலந்துரையாடலின் போது இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர், “வடகிழக்கை இணைத்து சமஷ்டி தரப்பட்டால் என்ன நடக்கும் என்ற பயம் அவர்களுக்கு இயல்பாகவே வரும். அதற்குப்பதில் இதுதான்.

நாம் யாரையும் வெளியேற்றத்தேவையில்லை. ஆனால் வடகிழக்கு தமிழ் பேசும் பிரதேசம் என ஏற்றுக்கொள்ளப்படவேண்டும். எமது மொழி, நிலம், பொருளாதாரம், கலாசாரம் எம்மால் பாதுகாக்கப்பட வேண்டும்.

எவ்வாறு தமிழ் மக்கள் தெற்கில் பல இடங்களில் கூடி வாழ்ந்து வருகின்றார்களோ, அதேபோல் சிங்கள மக்களுக்கும் தமிழ்ப்பேசும் வடகிழக்கு மாகாணங்களில் வாழ்வதை நாம் எதிர்க்கத்தேவையில்லை.

ஆனால் இங்கு தமிழ் மொழிக்கே முதலிடம் வழங்கப்படும். மதங்கள் அனைத்துக்கும் சம உரிமை வழங்கப்படும்.

எவ்வாறு வடமாகாண சபையில் நாம் இரண்டு சிங்கள பிரதிநிதிகளுக்காக எல்லா ஆவணங்களையும் சிங்களத்தில் மொழி பெயர்துக்கொடுத்து, அவர்களை சகோதர்கள் போல் நடத்துகின்றோமோ அதேவாறு எம்மிடையே வாழும் சிங்கள மக்களையும் நாம் வாழ விடுவோம்.

சமஷ்டி என்றதும் தங்களை விரட்டி அடித்துவிடுவார்கள் என்று அஞ்சுகிறார்கள் சிங்கள மக்கள். அதேபோல தெற்கில் வாழும் தமிழ் மக்களும் தாங்கள் வடகிழக்கிற்குப் போக வேண்டி வரும் என்று அஞ்சுகிறார்கள்.

இது தவறான எண்ணமாகும். நிர்வாகமானது மத்தியில் இருந்து மாகாணத்திற்கு கைமாறும் மாகாண நிர்வாகத்தை மாகாண மக்களே நிர்ணயிப்பர்.

மாகாணக்காணி மாகாண மக்களுக்கே சொந்தமாகும். மாகாண பாதுகாப்பு மாகாண பொலிஸாரினாலேயே கண்காணிக்கப்படும்.

இவற்றைவிட மக்கள் பெருவாரியாகப் புலம் பெயர வேண்டிய அவசியமில்லை. எவ்வாறு பிற மாகாணங்களில் சிங்கள மொழியில் ஆவணங்கள் அனைத்தும் இருக்க, தமிழ் மக்கள் அங்கு வாழ்ந்து வருகின்றார்களோ, அதே போலத்தான் தமிழ் மொழியில் ஆவணங்கள் இருக்க வடகிழக்கில் சிங்கள் மக்கள் தொடர்ந்து சட்டத்திற்கு அமைவாக வாழ்ந்து வரலாம்.

நாம் தமிழர்கள் என்ற முறையில் சிங்கள முஸ்லிம் மக்களை மனிதாபிமானத்துடனேயே நடத்துவோம். எம்மை மற்றவர்கள் பண்பற்ற முறையில் நடாத்தி வந்தது போல் நாமும் நடந்து கொள்ளமாட்டோம்.

அவ்வாறு நடந்து கொண்டால் எமது 2500 வருடங்களுக்கும் மேற்பட்ட எமது இலக்கியக் குறிக்கோள்கள், கலை, கலாசாரத்தை மீறியவர்கள் ஆகிவிடுவோம்.

தமிழர்களுக்கென்று ஒரு பாரம்பரியம் உண்டு. விதந்துரைக்கூடிய விழுமியங்கள் உண்டு. அவற்றிற்கு அணுசரணையாக நாம் நடந்து கொள்வோம்” எனவும் அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் தமிழ் மக்கள் பேரவையின் முக்கிய பிரதிநிதிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், திருகோணமலையிலுள்ள புத்திஜீவிகள் எனபலரும் கலந்து கொண்டனர்.