மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளுராட்சி சபை அமர்வுகளை ஆரம்பிக்கும் திகதிகள் அறிவிப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளுராட்சி சபை அமர்வுகளை ஆரம்பிப்பதற்கான திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.

எதிர்வரும் ஏப்ரல் நான்காம் திகதி முதல் சபையாக மண்முனை தென் மேற்கு (பட்டிப்பளை) பிரதேசசபை ஒன்றுகூடுவதாக தெரிவித்த அவர் ஏனைய சபைகளின் திகதிகளையும் அறிவித்தார்.

ஐந்தாம் திகதி போரதீவுப்பற்று மற்றும் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைகளும், ஆறாம் திகதி மண்முனை மேற்கு பிரதேசசபை மற்றும் மண்முனைப்பற்று பிரதேசசபையும் அமைக்கப்படவுள்ளது.

அத்துடன் 09ஆம் திகதி மட்டக்களப்பு மாநகர சபையும் ஏறாவூர் நகரசபையும், 10ஆம் திகதி ஏறாவூர்பற்றும் கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபையும் ஆட்சியமைக்கப்படவுள்ளதாகவும் கருணாகரம் தெரிவித்தார்.

அதேபோன்று 11ஆம் திகதி கோறளைப்பற்று மத்தியும், வாகரை பிரதேச சபையும் ஆட்சியமைக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.