மாவட்ட செயலகங்களில் மத வழிபாட்டுத் தலம் அமைப்பது எதிர்காலத்தில் தேவையற்ற முரண்பாடுகளை ஏற்படுத்தும்: ஜி.ரி.லிங்கநாதன்

மாவட்ட செயலகங்களில் மத வழிபாட்டுத் தலம் அமைப்பது எதிர்காலத்தில் தேவையற்ற முரண்பாடுகளை ஏற்படுத்தும் என வடமாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் தெரிவித்துள்ளார்.

வவுனியா ஸ்ரீ இந்து வித்தக விநாயகர் ஆலயத்தை இன்றைய தினம் வழிபாட்டுக்காக திறந்து வைத்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

மத வழிபாட்டு தலங்கள் சம்பந்தமாக குறிப்பாக வடமாகாணத்தில் புதிய புதிய நடைமுறைகளை கொண்டு வருகின்றார்கள். மதவழிபாட்டு தலம் பாடசாலை மற்றும் வைத்தியசாலையில் வைப்பது ஏற்றுக் கொள்ளக் கூடிய விடயம்.

ஆனால் அரச அலுவலகங்களில் மத வழிபாட்டுத் தலங்களை உருவாக்குவதன் நோக்கம் நாங்கள் சந்தேகப்பட வேண்டியதாக இருக்கின்றது.

வவுனியா மாவட்ட செயலகத்தில் மத வழிபாட்டுத் தலம் ஒன்றை அமைப்பதற்கு புதிதாக வந்த அரச அதிபர் நடவடிக்கை எடுத்திருந்தார். இருந்தும் மக்கள் பிரதிநிதிகளின் எதிர்ப்பு காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக நாங்கள் அறிகின்றோம்.

அரச அலுவலகத்தில் மத வழிபாட்டுத் தலம் என்பது தேவையில்லாத விடயம். தாங்கள் ஒழுங்காக வேலை செய்வதில்லை. அதனால் மக்கள் தங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்ய முதலில் ஆண்டவனை நாடி பின்னர் எங்களிடம் வாருங்கள் என அரச அதிபர் நினைத்தாரோ தெரியவில்லை.

எது எவ்வாறு இருந்தாலும் மாவட்ட செயலகத்தில் மத வழிபாட்டுத் தலத்தை அமைப்பது தேவையற்ற முரண்பாடுகளை எதிர்காலத்தில் ஏற்படுத்தும் என குறிப்பிட்டுள்ளார்.