ஐ.நா செவி சாய்க்குமா? சுமந்திரன் விடுத்திருக்கும் முக்கிய கோரிக்கை!

பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கை அரசாங்கத்தின் மந்தகதி போக்கினை கருத்தில் கொண்டு நடைபெறவுள்ள கூட்டத்தில் கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் உதவிப் பொதுச் செயலாளர் ஜெப்ரி பெல்ட்மன் இடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கை அரசியல் ரீதியில் தற்பொழுது குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. அரசாங்கத்திற்குள்ளேயே முரண்பாடுகள் முற்றி, அமைச்சரவை மாற்றங்களில் வந்து நிற்கிறது.

இந்நிலையில் அரசியல் தீர்வு தொடர்பான அரசாங்கத்தின் அணுகுமுறையில் முன்னேற்றங்கள் எவையும் தென்படவில்லை.

ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைகளுக்கான 37வது கூட்டத் தொடர் நடந்து கொண்டிருக்கும் நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் அமெரிக்கா சென்றுள்ளார்.

அங்கு ஐக்கிய நாடுகள் சபையின் உதவிப் பொதுச் செயலாளர் ஜெப்ரி பெல்ட்மனைச் சந்தித்த சுமந்திரன், பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கை அரசாங்கத்தின் மந்தகதி போக்கினை கருத்தில் கொண்டு நடைபெறவுள்ள கூட்டத்தில் கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.

உயர்ஸ்தானிகரின் புதிய யோசனைகளை அமெரிக்கா வரவேற்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

இச்சந்திப்பின் போது, அரசியல் விவகாரங்களுக்கு பொறுப்பான மாரி யாவசிடா, அமெரிக்காவின் ஐ.நா. வுக்கான தூதரகத்தின் உதவித் தூதுவர் கேலி கரி ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.