காத்திருப்பதைத் தவிர வேறு வழியேதும் இல்லை: இரா.சம்பந்தன்

உள்ளக சுயநிர்ணய உரிமை நிராகரிக்கப்படும் பட்சத்தில் வெளியக சுயநிர்ணய உரிமையைக் கோரும் உரித்து எமது இனத்துக்கு இருக்கிறது.அதனை சர்வதேச சட்ட திட்டங்கள் உறுதிப்படுத்துகின்றன என்று யாழ்ப்பாணத்தில் தெரிவித்திருக்கிறார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.

முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அ.அமிர்தலிங்கத்தின் திருவுருவச் சிலையைத் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் இந்நாள் எதிர்க்கட்சித் தலைவரான அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

வெளியக சுயநிர்ணய உரிமை என்பது மற்றொரு வடிவத்தில் தனிநாட்டைக் கோருவதுதான். தளபதி என்று செல்லமாக அழைக்கப்பட்ட அமிர்தலிங்கம் கூட, தனிநாட்டுக் கோரிக்கையை ஆணித்தரமாக முன்வைத்த ஒருவர்.

போதாததற்கு ஆயுத வன்முறை வழிக்குத் தமிழ் இளைஞர்கள் திரும்ப வேண்டும் என்றும், அதன் மூலம் தனி நாட்டை விரைவில் அடைந்து விட முடியும் என்றும் அழைப்பு விடுத்தவர்.

பின்னர் எதிர்க் கட்சித் தலைவர் பதவி கிடைத்ததும், தனி நாட்டுக் கொள்கையைக் கைவிட்டு விட்டார் என்று விமர்சிக்கப்பட்டவர். அதன் மூலம் துன்பியல் முடிவையும் எதிர்கொண்டவர்.

அப்படிப்பட்டவரின் சிலைத் திறப்பு விழாவில் நின்று கொண்டேதான், இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண இந்த அரசு முன்வராவிட்டால் தமிழர்கள் மீண்டும் தனிநாட்டுக் கோரிக்கையைக் கையில் எடுப்பார்கள் என்று மறைமுகமாகக் கூறியிருக்கின்றார் இரா.சம்பந்தன் ஐயா.

எனினும், தனிநாட்டுக் கோரிக்கையைத் தமிழர்கள் எப்போது கையில் எடுப்பார்கள் என்கிற விடயத்தை அவர் தெளிவுபடுத்தவில்லை.

தீர்வு விடயத்தில் கொழும்பு அரசு செயற்படுவதற்கான காலக்கெடு எது என்பதையும் அவர் சொல்லவில்லை. அது ஓரிரு வருட காலத்திலும் வரலாம். பல பத்து வருடங்களும் ஆகலாம் என்பதுதான் இப்போதைக்கு அவரது கருத்து.

இருந்தாலும், அரசியல் தீர்வு ஒன்றை உருவாக்குவதற்குக் கொழும்பு அரசு பின்னடிக்குமாக இருந்தால், தனிநாட்டுக் கோரிக்கையை திரும்பவும் கையில் எடுக்கத் தமிழர்கள் தயங்க மாட்டார்கள் என்பதை இடித்துரைக்கும் விதமாகவே சம்பந்தரின் பேச்சு இருந்தது என்று கொள்ளலாம்.

உள்ளுராட்சித் தேர்தலின் பின்னர் புதிய அரசமைப்பு முயற்சிகளில் இருந்து அரசு பின்வாங்கியிருக்கும் நிலையில் அரசுக்கு இந்த எச்சரிக்கையை விடுப்பது அவருக்கு அவசியமாகவும் இருந்திருக்கும் எனக் கொள்ளலாம்.

தனி நாட்டுக் கோரிக்கையை நிபந்தனையின்றிக் கைவிட்டு விட்டோம் என்பதை வெளிப்படையாகவும் ஆணித்தரமாகவும் கூறி வந்தவர் சம்பந்தன்.

ஒன்றிணைந்த நாட்டுக்குள்ளேயே ஒரு தீர்வைக் கேட்கிறோம் என்று திரும்பத் திரும்பச் சொல்வதற்கு அவர் தயங்கியதில்லை.

அப்படிப்பட்டவரே இப்போது வெளியக சுயநிர்ணய உரிமையைக் கோரும் உரிமை தமிழர்களுக்கு இருக்கின்றது என்பதைத் திரும்பத் திரும்ப வலியுறுத்தும் நிலமை வந்திருக்கிறது என்பதும் கவனிக்கப்படவேண்டிய விடயம்.

சம்பந்தனதும் பங்களிப்புடன்தான், ரணில் – மைத்திரி கூட்டு அரசு நிறுவப்பட்டதும், மைத்திரிபால சிறிசேன அரச தலைவரானதும் நடைபெற்றன.

அதனாலேயே இந்த அரசின் மூலம் ஒரு தீர்வை எப்படியாவது அடைந்து விட முடியும் என்று நம்பி அவர் கருத்துக்களைத் தெரிவித்து வந்தார், வருகின்றார்.

ஆனால், நிலைமைகள் மெச்சத்தக்க விதத்தில் இல்லை என்பதை அவரது இந்த உரை துலாம்பரப்படுத்துகின்றது.

சர்வதேச சமூகம் இந்த விடயத்தில் தமிழர்களுடன் முழுமையாக நிற்பதாகவும், பிராந்திய வல்லரசொன்று தமிழர்களுக்கு நியாயம் வழங்கப்படவேண்டும் என்பதில் உறுதியாக நிற்பதாகவும் கூட, சம்பந்தன் தெரிவிக்கிறார்.

இருந்தாலும் தீர்வு எப்போது என்பது அவருக்கும் தெரியவில்லை என்பதையே அவரது உரை காட்டுகின்றது. காத்திருப்பதைத் தவிர தமிழர்களுக்கு வேறு வழியேதும் இல்லை என்பதும் புலப்படுகின்றது.

அப்படிப்பட்டதொரு நிலையில் வெளிய சுயநிர்ணய உரிமையைத் தமிழர்கள் எப்போது கோரப் போகின்றார்கள்?